சட்டக்கூலியை முழுமையாக வழங்குக! விவசாய தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்
திருச்சிராப்பள்ளி, ஜூலை 15- திருச்சி புறநகர் மாவட்டம் உப்பிலியபுரம் ஒன்றியத்தில் ஒக்கரை ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தினை சட்டப்படி அமல்படுத்த வேண்டும். சட்டக்கூலியை முழுமையாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் செவ்வாய் அன்று ஒக்கரை ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு குமார், வவிசுவநாதன் ஆகியோர் தலைமை தாங்கினர். போராட்டத்தை மாவட்ட தலைவர் தெய்வநீதி துவக்கி வைத்தார். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாண்டியன், ஒன்றியச் செயலாளர் கணேசன், மாவட்ட துணைச் செயலாளர் தளுகை இரா. முத்துக்குமார் ஆகியோர் பேசினர். பின்னர், மண்டல வட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையில் வட்டார வளர்ச்சி அலுவலர், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில், தினசரி தலா 365 பேருக்கு சுழற்சி முறையில் வேலை வழங்குவதாக எழுத்துப்பூர்வமாக உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.