பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தில் 350 ஆட்டோக்கள் ஒரே நேரத்தில் திரண்டு வந்ததால் பரபரப்பு
திருச்சிராப்பள்ளி, ஜூலை 18- திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் ஜூலை 16 ஆம் தேதிமுதல் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இதனால் மத்திய பேருந்து நிலையம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இயக்கப்பட்டு வந்த சுமார் 350 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது. இதைடுத்து ஜங்ஷன் பகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்களுக்கு பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில் ஆட்டோக்கள் நிறுத்த இடம் ஒதுக்கித் தர வேண்டும் என அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர். அதே நேரத்தில் பஞ்சப்பூரை சுற்றி உள்ள பகுதிகளை சேர்ந்தவர்கள், உள்ளூர் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மட்டுமே இடம் ஒதுக்கித் தரவேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதையொட்டி, நடந்த பேச்சுவார்த்தையில் ஜங்ஷன் பகுதியை சுற்றியுள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் பஞ்சப்பூர் பேருந்து முனையத்தின் பின்பகுதியில் ஒரு நாளும், உள்ளூர் ஆட்டோ ஓட்டுநர்கள் பேருந்து முனையத்தின் முன் பகுதியில் ஒரு நாளும் மாற்றி மாற்றி ஆட்டோக்களை நிறுத்தி, பயனாளிகளை ஏற்றிச் செல்வது என முடிவானதாகக் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து, ஜங்ஷன் மற்றும் திருச்சி மத்திய பேருந்து நிலையப் பகுதியிலுள்ள 350-க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் வெள்ளியன்று, அணிவகுத்த படி, பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்துக்குச் சென்றனர். பின்னர், பேருந்து நிலையத்தின் பின்புறம் உள்ள ஆட்டோ ஸ்டாண்டுக்கு சென்று ஆட்டோக்களை நிறுத்தினர். அப்போது, உள்ளூர் ஆட்டோக்களும் பின்புறம் கொண்டு வந்து நிறுத்தி பயணிகளை ஏற்றினர். இதனால் உள்ளூர் ஆட்டோ ஓட்டுநர்களுக்கும், ஜங்ஷன், மத்திய பேருந்து நிலையப் பகுதியில் இருந்து அங்கு சென்ற ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அந்தப் பகுதியில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அங்கு வந்த காவல்துறையினர், மோதல் ஏற்படுவதை தடுத்து நிறுத்தினர்.