tamilnadu

புதிய நகர்ப்புற நலவாழ்வு மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள்!

புதிய நகர்ப்புற நலவாழ்வு மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள்!

முதலமைச்சர் திறந்து வைத்தார்

சென்னை, ஜூலை 3 - ரூ. 52 கோடி செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 208 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள், ரூ. 60 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 50 ஆரம்ப சுகாதார நிலையங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  திறந்து வைத்தார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் மாநகராட்சி மற்றும் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் புதிதாக நகர்ப்புற நல்வாழ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை சென்னை அடையாறு சாஸ்திரி நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மக்கள் பயன்பாட்டிற்காக முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். நகர்ப்புற நல்வாழ்வு மையங்கள் தமிழகம் முழுவதும் அமைக்கப்படும். மக்கள் இருக்கக்கூடிய இடங்களுக்கு நேரடியாக மருத்துவத்தைக் கொண்டு செல்ல வேண்டும் என்ற அடிப்படையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் 208 நகர்ப்புற நல்வாழ்வு மையங்கள் கட்டப்பட்டுள்ளன. தலா 25 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள இந்த திட்டத்திற்கு மொத்தமாக ரூ. 52 கோடி மதிப்பீட்டில் இந்த கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. அதேபோல் 50 ஆரம்ப சுகாதார நிலையங்களில் 28 கிராமப் புறங்களிலும், 22 நகர்ப்புறங்களிலும் சுமார் ரூ.60 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளன. இந்த கட்டடங்களையும் முதல்வர் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், அமைச்சர் மா. சுப்பிரமணியன், மேயர் ஆர். பிரியா, மாநிலங்களவை மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.