தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுப்ரியா சுலே
சு. வெங்கடேசன் தெளிவான சிந்தனையுடன் கருத்துகளை நாடாளுமன்றத்தில் எடுத்துவைக்கும் சிறந்த நாடாளுமன்றவாதி. நம்மில் ஒருவர் புரிந்துள்ள சாதனைக்காக வெற்றி விழா நடத்துவது மகிழ்ச்சியைத் தருகிறது.’ n
நாடாளுமன்ற திமுக தலைவர் கனிமொழி '
“சரித்திர நாவலை சுவாரசியமாக வாசிக்கும் வகையில் எழுதி ஒருவர் வெற்றிபெற முடியும் என்ற நம்பிக்கை விதையை வேள்பாரி விதைத்துள்ளது. தனிப்பட்ட மனிதனாக, எழுத்தாளனாக நம்பக்கூடிய விஷயங்களுக்கு எதிராக இல்லாமலும், சரித்திரத்துக்கு நேர்மையாகவும் சமன்படுத்தி வேள்பாரி நாவலை வெற்றிப் படைப்பாக்கியுள்ளார் சு.வெங்கடேசன். இவ்வாறு எழுதக்கூடிய, சிந்திக்கக்கூடியவர்கள் நாடாளுமன்றத்தில் பணியாற்றும்போது பழமைவாதச் சிந்தனையை மாற்றுபவர்களாக உள்ளனர். தற்போதைய சூழலில் பெண்களைப் பார்ப்பதிலும், அவர்களை நடத்துவதிலும், விமர்சனக் கருத்துகளைத் தெரிவிப்பதிலும் இப்படிச் சிந்திக்கக்கூடியவர்கள் சமூகத் தடைகளைக் கடந்து உடைத்துக்கொண்ட மனிதர்கள். இவர்கள் நாடாளுமன்றத்திலும், அரசியலிலும் பணியாற்றும்போது புதிய சுவாசத்தைத் தருகிறது. இதற்காக சு. வெங்கடேசன் சார்ந்துள்ள மார்க்சிய இயக்கத்துக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.” n
மத்திய சென்னை திமுக எம்.பி. தயாநிதி மாறன்
“தோழர்கள் நாவல்கள் எழுதினால் அவை போராட்ட நாவல்களாக இருக்கும். காவிய நாவலை எழுதுவது அரிது. பெருமைக்குரிய நாவலை எழுதியமைக்காகத் தலைநகர் தில்லியில் நடைபெறும் இந்த வெற்றிவிழா சு. வெங்கடேசனுக்கு மட்டும் பெருமையல்ல, தமிழர்கள் அனைவருக்கும் பெருமை சேர்க்கிறது. நாடாளுமன்றத்தின் பேச்சுகள் சுவையாகவும், தொகுதி மக்களுக்காகவும், தமிழர்களுக்காகவும் பேசிய கலைஞர் கருணாநிதியைப் போல் சு. வெங்கடேசனும் மாற்றி யோசிக்கிறார்.” n
நீலகிரி திமுக எம்.பி. ஆ. ராசா
“கொள்கைப் பற்றாளர், தத்துவச் சிந்தனையாளராக சு. வெங்கடேசன் திகழ்ந்து வருகிறார். பொதுவுடமைச் சிந்தனை மட்டுப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டிலிருந்து காக்கும் வகையில் ‘கம்யூனிசம் இந்த மண்ணுக்குத் தேவை’ என்ற வலிமைமிக்க வாதத்திறமையைக் கொண்டுள்ளார். அவரது எழுத்துகள் சமூகத்தை நாகரிகம், வளர்ச்சி, முற்போக்கு ஆகிய அம்சங்களில் ஓர் அங்குலமாவது உயர்த்த வேண்டும் என்ற எண்ணக் கிடக்கையைக் கொண்டுள்ளன. சக எம்.பி. என்பதில் பெருமையடைகிறேன். ‘பட்டாளிகளிடம் அடிமைச் சங்கிலியைத் தவிர இழப்பதற்கு ஏதுமில்லை’ என மார்க்ஸ் சொல்கிறார். எத்தடையுமின்றி அவரை இயங்கச் செய்ய கம்யூனிஸ்ட் இயக்கம் வழிவகுத்துள்ளது. அவரை வாழ்த்தி, அவரை வார்த்தெடுத்த இயக்கத்துக்கும் பாராட்டுகள். வீரப் போராளியின் கடைசி ஆசை எழுத்து எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக பிலிப்பைன்ஸ் நாட்டு விடுதலை வீரப் போராளியின் கதையைச் சொல்கிறேன். கம்யூனிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்தவர். விடுதலைக்காகப் போராடினார். மரணதண்டனை வழங்கப்பட்டது. கடைசி ஆசையைக் கேட்டபோது, ‘எனக்கு எழுத ஏதுமில்லை, எழுதாதீர்கள். எங்கே அடக்கம் செய்கிறீர்களோ அங்கு எப்போதாவது சிறு மலர் பூத்திருக்கும். இந்த நாடு விடுதலை அடையும்போது, அதற்காக நான் போராடினேன் என யாராவது கருதினால், எனது கல்லறையில் பூத்திருக்கும் அந்த மலருக்கு ஒரு முத்தம் கொடுங்கள். அப்போது தேசம் விடுதலை அடைந்தமைக்கான மகிழ்ச்சியை உள்ளே இருக்கும் நான் உணர்வேன்’ என எழுதியுள்ளான். அப்படிப்பட்ட எழுத்து வீரியம் கொண்ட கவிஞரை வாழ்த்தக் கடமைப்பட்டுள்ளேன். சாதியாலும் மதத்தாலும் எவ்வித தடையுமின்றி இயங்கும் சு. வெங்கடேசனின் குடும்பத்தையும், அவரது இயக்கத்தையும் வாழ்த்துகிறேன்.” n
சமாஜ்வாதி கட்சி எம்.பி. டிம்பிள் யாதவ்
“சு.வெங்கடேசனின் வேள்பாரி நாவலை இந்தியில் வாசிக்க ஆவலுடன் காத்திருக்கிறோம். அகிலேஷ் யாதவ் சார்பில் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவிக்கிறேன்.” n
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. ஜான் பிரிட்டாஸ்'
நன்றியுரையில்: “பண்பாட்டு அம்சங்களை ஆயுதமாக்கி, சமூகத்தை மதவாதமாக்கி, போர்களை ஊக்குவிக்கும் சூழலில் சு. வெங்கடேசன் எழுதியுள்ள வேள்பாரி போன்ற வரலாற்று நாவல் படைப்பு மக்களின் பண்பாட்டையும், வரலாற்றையும் அறிந்துகொள்ளத் தேவையாகிறது.” n
சு. வெங்கடேசன் ஏற்புரை
“இயற்கைக்கும் மனித பேராசைக்கும் இடையில் நடக்கும் இன்றைய போராட்டத்தின் ஆதி வடிவமாக வேள்பாரி நாவலைப் படைத்துள்ளேன். இயற்கைக்கும் மனித பேராசைக்கும் நடக்கும் போராட்டம் முடிவுறப்போவதில்லை. தற்காலத்தில் மேலும் உக்கிரமாகியுள்ளது. வேள்பாரி முதலாளித்துவத்தின் எதிரி என இங்கு சொன்னபோது, ப.சிதம்பரம் அவர்கள். ‘இது முதலாளித்துவத்தின் எதிரி அல்ல, ஏகாதிபத்தியத்தின் எதிரி’ என அழகாகச் சொன்னார். இயற்கைக்கும் மனித பேராசைக்கும் நடக்கும் போராட்டத்தில் இயற்கையை நேசிக்கிற, இயற்கையோடு சமநிலையைப் பேணுகிற எல்லா மனித உயிர்களும் படிக்க வேண்டிய இலக்கியமாக வேள்பாரி நாவல் அமைந்துள்ளது. ஆங்கிலம், மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் மொழிபெயர்ப்பு நடைபெற்று வருகிறது. மலையாளத்தில் விரைவில் வெளிவர உள்ளது. இந்த நிகழ்வு அதற்கு உத்வேகம் அளிக்கிறது. இலக்கியத்துக்குக் கிடைத்துள்ள வரவேற்பு நம்பிக்கை அளிக்கிறது.”
நிகழ்வு ஏற்பாடு
கரூர் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி வரவேற்புரையாற்றினார். தென் சென்னை திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் நிகழ்வைத் தொகுத்து வழங்கினார். நாடாளுமன்ற தமிழக எம்.பி.க்கள், அனைத்துக் கட்சித் தலைவர்கள், தமிழ் ஆர்வலர்கள் உள்ளிட்டோர் நிகழ்வில் கலந்துகொண்டனர்.