தஞ்சாவூர் கோவில் அருகே வாகன நிறுத்தும் இடத்தில் மேயர் ஆய்வு
தஞ்சாவூர், ஜூலை 10- தஞ்சை வடபத்ரகாளியம்மன் கோவில் அருகே, புதர்மண்டிக்கிடக்கும் ஒன்றே கால் ஏக்கரில் வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட உள்ளது. இதனை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், ஆணையர் கண்ணன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தஞ்சை கீழவாசல் பகுதியில், வடபத்ரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்தின் கீழ் உள்ள 88 கோவில்களுள் ஒன்றாகும். இந்த கோவிலுக்கு பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் வருவது உண்டு. குறிப்பாக கார் மற்றும் வாகனங்களில் அதிக அளவில் பக்தர்கள் வருகிறார்கள். இதனால் வாகனம் நிறுத்துமிடம் இல்லாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதையடுத்து, கோவிலுக்கு அருகே கோவிலுக்குச் சொந்தமான ஒன்றேகால் ஏக்கர் இடம் உள்ளது. இந்த இடம் புதர்கள் மண்டி, சீமைக்கருவேல மரங்கள் நிறைந்து காணப்படுகிறது. அந்த இடத்தில் மாநகராட்சி மூலம் சுற்றுச்சுவர் அமைத்து வாகன நிறுத்துமிடம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த இடத்தை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், ஆணையர் கண்ணன் ஆகியோர் வியாழக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜிராஜா போன்ஸ்லே, மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் ரமேஷ்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.