கண்டியூரில் 15 குடும்பங்களுக்கு பட்டா வழங்க இடம் தேர்வு
தஞ்சாவூர், ஆக. 22- தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு வட்டம், கண்டியூர் கிராமம், வடக்குத் தெருவில் குடியிருந்து வந்த 15-க்கும் மேற்பட்ட குடிமனை தாரர்களுக்கு பட்டா வழங்குவதற்கான குலுக்கல் சீட்டு முறையில் இடம் ஒதுக்கீடு செய்யும் நடவடிக்கை, ஆக.22 (வெள்ளிக்கிழமை) அன்று திருவையாறு வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. திருவையாறு வட்டாட்சியர் (பொ), வருவாய் அலுவலர், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் அரசு ஊழியர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில், ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில், பல வருடங்களாக வசித்து, தற்போது வீடுகளை இழந்து தவித்த குடிமனைதாரர்கள் 15 குடும்பத்தினர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு மாற்று இடம் வழங்கிய பிறகே, அப்புறப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு அடிமனை மற்றும் குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள், வீடுகளை இடிக்க வந்த பொக்லைன் இயந்திரத்தை தடுத்து நிறுத்தி போராட்டம் நடைபெற்றது. பல கட்டங்களாக நடைபெற்ற போராட்டத்தின் போது, நடைபெற்ற சமாதானப் பேச்சுவார்த்தையில், “பாதிக்கப்படும் மக்களுக்கு மாற்று இடம் வழங்கப்படும்” என அரசுத் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. அவர்களுக்கு, ஏற்கனவே வாக்குறுதி அளித்தபடி கோவிலில் இடங்களிலும், அரசு இடங்களிலும் குடியிருந்தவர்களுக்கு, தமிழ்நாடு அடிமனை மற்றும் புத்தக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பாக வைக்கப்பட்ட அந்த கோரிக்கையை அரசு ஏற்றுக்கொண்டு, ஏற்கனவே வசித்து வந்த இடத்தில் இருந்து, 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மணக்கரம்பை என்ற கிராமத்தில் சம்பந்தப்பட்ட 15 பேர்களுக்கும் வழங்க, குலுக்கல் முறையில் இடம் தேர்வு செய்து, அடையாளம் காட்டப்பட்டது. அதன்படி, வரக்கூடிய அரசு நிகழ்ச்சியில் அவர்களுக்கு உரிய பட்டாவை வழங்குவது என்று முடிவு செய்து, பட்டா எண் ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், அடிமனை மற்றும் குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மாவட்டச் செயலாளர் எம்.ராம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் பிரதீப் ராஜ்குமார், கண்டியூர் கிளைச் செயலாளர் ராமமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தங்களுக்கு சட்டபூர்வமான வீட்டு மனைப் பட்டா கிடைக்க போராட்டம் மூலம் நடவடிக்கை மேற்கொண்ட அடிமனை மற்றும் குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிர்வாகிகளுக்கு, பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.