tamilnadu

img

நிலக்குவியலுக்கு எதிரான போராட்டம் வலுப்பெறட்டும்!

நிலக்குவியலுக்கு எதிரான போராட்டம் வலுப்பெறட்டும்!

திண்டுக்கல் விவசாயிகள் மாநாட்டில் முழங்கிய குரல்கள்

ண்டுக்கல், ஆக. 18- தமிழ்நாட்டில் நிலமற்ற ஏழை விவசாயி களுக்கு நிலம் பெற்றுத்தர நில உரிமைப் போராட்டங்களை வலுப்படுத்துவோம் என்று  திண்டுக்கல்லில் ஆகஸ்ட் 14 அன்று நடை பெற்ற மாநில மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் இணைந்து நடத்திய நிலவுரிமை மாநாட்டில் பல்வேறு தலைவர்கள் கலந்துகொண்டு நிலப்பிரச்சனைகள் குறித்து உரையாற்றினர். நிலம் - ஒரு அடிப்படை உரிமை மாநாட்டை துவக்கி வைத்து, அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செய லாளர் டாக்டர் விஜுகிருஷ்ணன் உரையாற்று கையில், “நாடு முழுவதும் கணிசமான நிலங்கள் பினாமிகள் பெயரில் உள்ளன. பஞ்சாப்பில் முதலமைச்சரின் எருமை மற்றும் மாடு பெயரிலும் கூட நிலம் இருக்கிறது. கிராமப்புறங்களில் உள்ள உபரி நிலங்களை நில மாஃபியா கும்பல்கள், ஆக்கிரமித்து வைத்துள்ளார்கள்” என்று கூறினார். “கர்நாடகாவில் விவசாயிகள் காலம் காலமாக விவசாயம் செய்து வருகிறார்கள், ஆனால் அவர்களுக்கு பட்டா இல்லை. ஜனதா தளம், பாஜக, காங்கிரஸ் அரசுகள் இதுவரை  பட்டா தரவில்லை” என்று விமர்சித்தார். நிலச்சீர்திருத்தத்தின் உண்மை நிலை விஜுகிருஷ்ணன் மேலும் கூறுகையில், “கேரளா, மேற்கு வங்கம், ஜம்மு-காஷ்மீர், திரிபுரா ஆகிய மாநிலங்களில் நிலம் ஏழை  எளிய மக்களுக்கு பிரித்துக்கொடுக்கப்பட்டி ருக்கிறது. 1980 முதல் 90 வரை கேரளாவில் நிலத்திற்கான போராட்டத்தில் கையூர் போன்ற இடங்களில் 700க்கும் அதிகமானவர்கள் போலீஸ் மற்றும் நிலபிரபுக்களின் தாக்குத லுக்கு ஆளாகி இன்னுயிரை ஈந்த வரலாறும் உண்டு” என்றார். பீகாரில் வினோபா பாவேயின் பூமி தான இயக்கத்தில் ஆறரை லட்சம் ஏக்கர் நிலம் கிடைத்ததாக கூறப்பட்டாலும், உண்மையில் அந்த நிலம் கங்கை நதி நடுவில் இருப்பதாக விமர்சித்தார். ஒன்றாக இருந்த ஆந்திர மாநிலத்தில் 40 லட்சம் ஏக்கர் உபரி நிலம் இருப்பதாக கொண்டே  ரங்காராவ் கமிசன் தெரிவித்து, ஒரு குடும்பத்திற்கு ஒரு ஏக்கர் நிலம் தர சிபாரிசு செய்தது. ஆனால் அது அமலாகவில்லை. அதே  போல் ஆந்திராவில் 54 லட்சம் ஏக்கர் அசைனை நிலங்கள் உள்ளன. இதில் 44 லட்சம் ஏக்கர் மலைவாழ் மக்களுக்கும், தலித் மக்களுக்கும் கொடுத்ததாக பேப்பரில் உள்ளது. ஆனால் உண்மையில் 15 லட்சம் ஏக்கர் முதலமைச்சர் குடும்பத்திடமே இருக்கிறது. ஒரிசாவில் பூரி ஜெகநாதர் பெயரில் 60 ஆயிரம் ஏக்கர் நிலம் உள்ளது. அங்கு 75 லட்சம் ஏக்கர் உபரி நிலம் இருந்தும் விவசாயிகளிடம் 10 சென்ட் நிலம் கூட இல்லாத நிலை உள்ளது. ஆனால் அந்த நிலங்களை டாடா, பிர்லா, அம்பானி, அதானி போன்ற பன்னாட்டு நிறுவனங்களுக்கு அரசு கொடுக்கிறது எனவும் அவர் விவரித்தார். கார்ப்பரேட் ஆதிக்கத்திற்கு எதிரான குரல் திண்டுக்கல் மக்களவை உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம் பேசுகையில், “ஒரு காலத்தில் ஜமீன்தார்களுக்கு, மிராசுதார்களுக்கு எதிரான போராட்டம் இருந்தது. இன்றைக்கு ஆட்சி யாளர்களுக்கு எதிராகவும், அவர்களின் பினாமி களுக்கு எதிராகவும், கார்ப்பரேட்டுகளுக்கு எதிராகவும் நாம் போராட வேண்டியுள்ளது” என்று தெரிவித்தார். திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி நெய்க்கா ரப்பட்டி ஜமீன், கன்னிவாடி ஜமீன் ஆகிய வற்றுக்கு எதிரான போராட்டங்களின் மூலம் விவசாயிகளுக்கு நிலங்கள் பெற்றுத்தரப்பட்ட வரலாற்றை நினைவுபடுத்தினார். விவசாயி கள் சங்கத் தலைவர்கள் ஆர்.ராமராஜ்,  வி.ஏ.கருப்புசாமி ஆகியோரின் போராட்டங் களால் அப்பகுதி விவசாயிகளுக்கு நிலம் கிடைத்தது. இன்றைக்கும் அவர்களிடம் நிலம் உள்ளது, ஆனால் பட்டா இல்லை. தும்மலப்பட்டி கிராமத்தில் தலித் மக்களுக்கு நிலம் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த நிலம் எங்கே இருக்கிறது என்று தெரியாத நிலையில், விவசாயிகள் சங்கமே அந்த நிலத்தைக் கண்டறிந்து அந்த  தலித் மக்களை உழவு செய்ய வைக்க போராட்டம் நடத்தியது. இன்னும் இந்த மாவட்டத்தில் பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் ஏழை  தலித் மக்களுக்கு பிரித்துக் கொடுக்கப்பட வேண்டியுள்ளது என்று குறிப்பிட்டார். செப்டம்பர் 30 ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சாமி.நடராஜன்  மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங் களை விளக்கினார்: 1. 40 லட்சம் குடும்பங்களுக்கு வீட்டுமனை மற்றும் பட்டா வழங்க வேண்டும்;

2. 1962ல் நிறைவேற்றப்பட்ட நில உச்ச வரம்பு சட்டத்தை அமலாக்க வேண்டும்;

3. 1891 முதல் 1933 வரை வழங்கப்பட்ட 12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலங்களை கண்டறிந்து மீண்டும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும்;

4. இனாம் நில பிரச்சனையில் குத்தகை விவசாயிகளுக்கு 75 விழுக்காடு விளைச்சலும், நில உரிமையாளர்களுக்கு 25 விழுக்காடும் வழங்கும் சட்டத்தை அமலாக்க வேண்டும்; 5. 4,78,000 ஏக்கர் கோவில் நிலங்களில் நீண்ட காலமாக விவசாயம் செய்யும் குத்தகை தாரர்களை வெளியேற்றக்கூடாது. அரசாணை 318 படி அவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும்; 6. 2006 வன உரிமைச் சட்டத்தை சரியாக  அமலாக்க வேண்டும்; வன நிலங்களி லிருந்து பூர்வகுடிகள், ஆதிக்குடிகளை வெளியேற்றி கார்ப்பரேட் நிறுவனங்களை அமர்த்தக்கூடாது- என அவர் வலியுறுத்தி னார்.

மாநாட்டின் முக்கிய முடிவாக, செப்டம்பர் 30ஆம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பாகவும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது. இது தோழர் பி.சீனிவாசராவ் நினைவு தினம் என்பது குறிப்பிடத்தக்கது. நில விநியோகத்தின் அவசியம் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.வெங்கட், தமது நிறைவுரையில், “இந்தியா முழுவதும் 40 கோடி ஏக்கர் சாகுபடி நிலங்கள் உள்ளன. இதில் 30 சதவீத நிலங்கள் வெறும் ஐந்து சதவீத  பணக்காரர்களிடம் குவிந்துள்ளன. 70 சதவீத நிலங்கள் மட்டுமே 95 சதவீத சிறு குறு  விவசாயிகளிடம் உள்ளது” என்று புள்ளி விவரங்களுடன் விளக்கினார். “1960களில் நிர்ணயிக்கப்பட்ட 15 ஏக்கர் நில உச்சவரம்பை, தற்போதைய விளைச்சல் அளவுகளுக்கு ஏற்ப மறுவரையறை செய்ய வேண்டும். 1960களில் நெல் விளைச்சல் ஏக்கருக்கு ஐந்து குவிண்டால் மட்டுமே இருந்தது. இன்று தேசிய சராசரி 24.5 குவிண்டால். பஞ்சாபில் 42, தமிழ்நாட்டில் 32,  தெலுங்கானாவில் 29, ஆந்திராவில் 28 குவிண்டால் என விளைச்சல் பல மடங்கு  அதிகரித்துள்ளது. எனவே நில உச்ச வரம்பை மறுவரையறை செய்ய வேண்டும். இதன் மூலம் நிலமற்ற விவசாய தொழி லாளர்களுக்கு ஒரு குடும்பத்திற்கு 1-2 ஏக்கர் வழங்க முடியும்” என்றார். “ஒரு சதவீத செல்வந்தர்களிடம் நாட்டின் செல்வம் 40 சதவீதம் குவிந்துள்ளது. 50 சதவீத மக்களிடம் வெறும் மூன்று சதவீத செல்வம் மட்டுமே உள்ளது. செங்கொடியின் கீழ் ஆட்சி  நடைபெறும் சீனாவில் தனிநபர் ஜிடிபி (மொத்த உள்நாட்டு உற்பத்தி) 13,700 டாலர், ஆனால் இந்தியாவில் 2,700 டாலர் மட்டுமே. வர்க்க பாகு பாடு கொண்ட ஆட்சியாளர்களால் ஒட்டுமொத்த வளர்ச்சியைக் காண இயலாது” என்று கடுமையாக விமர்சித்தார். மாநாட்டில் “தமிழ்நாடு அரசு சட்ட மன்றத்தில் நிலப்பிரச்சனைகள் குறித்து சிறப்பு  விவாதம் நடத்தி, தேவையான சட்டதிருத்தங் களைக் கொண்டுவர வேண்டும். நிலமற்ற வர்களுக்கு நிலம், பட்டா இல்லாதவர்களுக்கு பட்டா வழங்க முன்வர வேண்டும்” என்று தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர்.  “நிலம் என்பது உழைக்கும் வர்க்கத்தின் அடிப்படை உரிமை. தொழிலாளர்கள், விவ சாயிகள், விவசாய தொழிலாளர்களின் வர்க்க ஒற்றுமையைப் பலப்படுத்த வேண்டும். ஒவ்வொரு மாவட்டக் குழு உறுப்பினரும் குறைந்தது ஐந்து கிராமங்களை தேர்வு செய்து  பணியாற்றினால் ஆயிரக்கணக்கான மக்களை திரட்ட முடியும்” என்று பி.வெங்கட் அறைகூவல் விடுத்தார். நிலவிநியோகம் இல்லாமல் நாட்டில் சீரான பொருளாதார வளர்ச்சியைக் காண இயலாது என்பதை ஆட்சியாளர்களுக்குப் புரிய வைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக தலைவர்கள் வலியுறுத்தினர்.     (ந.நி.)