சாதிப் போர்வையை தூக்கி எறிவோம்!
ஊருக்கு வெளியில் உறவாய் கூடுது, உள்ளே வந்தால் தானாய் பிரியுது பள்ளி கல்லூரி வகுப்பறையில் பாசமாய் நேசமாய் பழகுவார், மாலையில் வீட்டுக்குப் போகும்போது பிரிந்து செல்ல வைக்குது சாதி! படித்தவனுக்கு கிடைத்தது வேலை பாத்ரூம் கழுவும் தொழில்! ஆனால் பணி செய்ய விடாமல் அவனை தடுக்குது சாதி! கொத்தனார் சித்தாள் கட்டிய வீட்டில் நடக்கும் கிரகப்பிரவேசம்! பின் நடு முற்றம் செல்ல தடி போட்டு தடுக்குது சாதி! பஸ்ஸில் ஒன்றாய் பயணம் செய்வோர், ஊர்வந்து இறங்கியதும் கொஞ்சம் தூரமாய் விலகி போங்க என்று சொல்லுது சாதி! தியேட்டர் இடைவேளையில் ஒரு சிகரெட்டை ஒன்பது பேர் மாறி மாறி ஊதுவார், வெளியில் வந்த பின் ஒன்றாய் சேர்ந்து ஊத மறுக்குது சாதி! நாகரிகம் வளர்ந்த ஊரில், நாய் வளர்ப்பில் கூட சேரியில் ஆண் நாய் வளர்க்க கடிவாளம் போடுது சாதி! கங்கையையும் காவிரியையும் இணைக்க முயலும் கூட்டம், ஆரியனையும் அரிசனனையும் ஒன்றாய் இணைத்தால் ஆகாதோ! கல்யாண மண்டபத்தில் சமைத்த சாப்பாடு ரொம்ப பிரமாதம்! ஆனால் ஊர் காட்டில் சமைத்தால் சாப்பிட மறுக்குது சாதி! மணப்பெண் மாப்பிள்ளை பார்க்க புரோக்கரிடம் புக்கிங் பண்ணுவார், எல்லா பொருத்தமும் இருக்குது ஆனால் மணம் செய்ய மறுக்குது சாதி! காதலோடு பருகும் காப்பிக்கு இன்னும் சுவை அதிகம்! சாதியோடு சங்கமித்தால் வேதனை தான் அதிகம்! கடலுக்கு எல்லை இல்லை! காதலுக்கு அளவு இல்லை! தடை கடந்த காதலை தடுக்க தடி அரிவாள் தூக்குது சாதி! சாதிப் போர்வையை தூக்கி எறிவோம்! சாதியால் வெட்டுண்டு சாவதை தடுப்போம்! இயற்கை நீதியாம் காதலை வளர்ப்போம்! சாதியற்ற சமுதாயத்தை காப்போம்! சாதியம் தகர்ப்போம்! மனிதம் வளர்ப்போம்! தஞ்சை கே.அபிமன்னன்