மன்னர் சரபோஜி 248 ஆவது பிறந்த நாள்: ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை
தஞ்சாவூர், செப். 24- தஞ்சாவூர் சங்கீத மகால் தர்பார் ஹாலில், மன்னர் சரபோஜியின் 248 ஆவது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு, அன்னாரது உருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி, திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்து, மன்னர் சரபோஜி சிலைக்கு மாலை அணிவித்தனர். பின்னர், சங்கீத மஹாலில் நடைபெற்ற விழாவில் முனைவர் மணி.மாறன் எழுதிய, “இராஜ சரித்திரம்’’ மற்றும் “தமிழ் சுவடி விளக்க அட்டவணை - தொகுதி 27’’ என்ற நூலும், என்.வி.தேவி பிரஸாத் & என். ஸ்ரீநிவாசன் எழுதிய, “பாலபாரதமும் வில்லிபாரதமும்’’ - இரண்டாம் பாகம் என்ற நூலும், என்.வி.தேவி பிரஸாத் எழுதிய “கவிதாவதாரம்’’ என்ற நூலும், முனைவர் எஸ்.சுதர்சன் எழுதிய, “சாந்தி ரத்னாகரம்’’ இரண்டாம் பாகம் என்ற நூலும், எல்.அனிதா எழுதிய, “சரஸ்வதி மஹால் நூலக சுவடிகளின் அரிய தகவல்கள்’’ என்ற நூலும், டி.ரவி எழுதிய,”தேனு மாகாத்மியமு’’ என்ற நூலும், முனைவர் கே.ஜே.கிருஷ்ணமூர்த்தி எழுதிய, “நிஞ்ஜா மாகாத்மியமு’’ என்ற நூலும், பீ.ராமச்சந்திரன் எழுதிய, “தஞ்சாவூர் கவிஞ்சே பத சங்கிரஹ’’ என்ற நூல்களை மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் வெளியிட்டார். இவ்விழாவில், சரஸ்வதி மகால் நூலக ஆயுள் உறுப்பினர் சிவாஜி ராஜா து.போன்ஸ்லே, அரண்மனை தேவஸ்தானம் அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே, துணை ஆட்சியர் (பயிற்சி) சங்கர நாராயணன், சரஸ்வதி மஹால் நூலகம் மற்றும் நூலக பணியாளர்கள், நிர்வாக அலுவலர் ம.ஆனந்த கணேசன், தஞ்சாவூர் வட்டாட்சியர் சிவகுமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அ.பாரதி, மாவட்ட சுற்றுலா அலுவலர் சங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.