கரூர் துயரம்; சிபிஐ விசாரணைக்கு உத்தரவு இந்த இடைக்காலத் தீர்ப்பு மாறுதலுக்கு உட்பட்டது எனவும் உச்சநீதிமன்றம் விளக்கம்
புதுதில்லி, அக். 13 - தவெக தலைவர் விஜய்-யின் கரூர் பிரச்சாரத்தின் போது, 41 பேர் நெரிசலில் சிக்கி பலியான வழக்கில், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு, உச்சநீதிமன்றம் இடைக்காலத் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பு இடைக்கால உத்தரவுதானே தவிர அரசுத் தரப்பு பிரமாணப் பத்திரம் தாக்கலுக்குப் பிறகு இந்த உத்தரவு மாறுதலுக்கு உட்பட்டது என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். கரூர் சம்பவத்தில் சதி இருப்ப தாகவும், வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் எனவும் பாஜக-வைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜி.எஸ். மணி, சென்னை பாஜக கவுன்சிலர் உமா ஆனந்த் உட்பட 5 பேர் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்குகளை கடந்த அக்டோபர் 10 அன்று விசாரித்த நீதிபதி கள் ஜே.கே. மகேஷ்வரி, என்.வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு, அக்டோபர் 13 அன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது. அதன்படி திங்களன்று காலை 10.50 மணிக்கு தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், “கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும். உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான 3 பேர் கொண்ட குழு சிபிஐ விசார ணையை மேற்பார்வையிடும். சிபிஐ மாதந்தோறும் விசாரணை அறிக்கை யை அஜய் ரஸ்தோகியிடம் தர வேண்டும். அந்த ஆணையத்தில் தமிழகப் பிரிவைச் சேர்ந்த ஐபி எஸ் அதிகாரிகள் இருவர் இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் தமிழ கத்தை பூர்வீகமாக கொண்டவர் களாக இருக்கக் கூடாது” என்று நீதிபதி கள் ஜே.கே. மகேஷ்வரி, என்.வி. அஞ்சாரியா அமர்வு உத்தரவிட்டது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபி ஷேக் மனு சிங்வி, சிபிஐ விசாரணை கோரி போலி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதனை நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும் என்று தெரிவித் தார். அதற்கேற்ப தங்கள் பெயரில் மோசடியாக மனுதாக்கல் செய்துள்ள தாக குற்றம்சாட்டி இரண்டு பேர் காணொலி மூலம் ஆஜராகினர். நெரிசலில் பலியான 11 வயதுச் சிறுவன் பிரித்திக் கின் தந்தை பன்னீர்செல்வம் பெயரில் சிபிஐ விசா ரணை கோரப்பட்டிருந்த நிலையில், சிறுவன் பிரித்திக்கின் தாயார் ஷர்மிளா காணொலி முறையில் உச்சநீதிமன்றத்தில் ஆஜராகி, பிரித்திக் எனது மகன் தான்; எனது கணவர் பன்னீர்செல்வம் வழக்கு போட்டது எனக்கு தெரியாது; அவர் பணத்திற்காக வழக்கு தொடுத்துள்ளார். இறந்த எனது மகனுக்காக ஒரு சொட்டு கண்ணீர் கூட விடா தவர் எனது கணவர் பன்னீர்செல்வம். மகனின் இறுதிச்சடங்கிற்கு கூட வரவில்லை. அவர் என்னை யும் எனது குழந்தையையும் விட்டுச் சென்றே 8 ஆண்டுகளாகி விட்டது என்று தெரிவித்தார். அதேபோல சிபிஐ விசாரணை கோரியதாக கூறப்படும் மற்றொரு மனுதாரரும், நெரிசலில் மனைவியை இழந்தவருமான செல்வராஜ் என்ப வரும், சிபிஐ விசாரணை கோரி, தான் எந்த வழக்கையும் தாக்கல் செய்யவில்லை என்றும், தனது கையெழுத்தைப் பெற்று, தனக்கே தெரி யாமல் வழக்கு போடப்பட்டுள்ளதாக கூறினார். எனினும், தாங்கள் அளித்த தீர்ப்பை மாற்றிக்கொள்ளாத நீதிபதிகள், உச்ச நீதிமன்றத் தில் மோசடியாக மனுத்தாக்கல் செய்யப்பட்டது உண்மையாக இருக்கும் பட்சத்தில், அதனையும் சிபிஐ விசாரிக்க உத்தரவிடுவோம் என்று நீதி பதிகள் கூறிவிட்டனர்.
அருணா ஜெகதீசன் ஆணைய விசாரணைக்கு தடையில்லை
உச்சநீதிமன்றத்தின் இடைக்கால தீர்ப்பை விளக்கி, தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பி. வில்சன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: “இரண்டு பேர் (ஷர்மிளா, செல்வராஜ்) இன்று நீதிமன்றத்தில் ஆஜராகி, தங்களது அனுமதியில்லாமல் தங்கள் தரப்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, சிபிஐ விசாரணைக்கான உத்தரவு பெறப்பட்டிருக்கிறது என்று உச்சநீதிமன்றத்தில் கூறியிருக்கின்றனர். இந்த மோசடி தொடர்பாக வழக்கு தாக்கல் செய்ய எங்களுக்கு (தமிழக அரசுக்கு) உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. கரூரில் 41 பேர் பலியான சம்பவத்தை சிபிஐ விசாரிப்பதற்கான உத்தரவை இடைக்காலமாகவே உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. போலியான நபர்களை கொண்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு, தீர்ப்பு பெறப்பட்டிருக்கிறது என்று தெரிய வந்தால், நீதிமன்றம் தமது தீர்ப்பையே ரத்து செய்துவிடும். எனவே, இறுதி உத்தரவு என்ன என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். எனினம், உச்சநீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பால், பாதிக்கப்பட்டோருக்கு எந்தப் பயனும் இல்லை. கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக விசாரிக்க, ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் தமிழக அரசு அமைத்துள்ள விசாரணை ஆணையம் குறித்து உச்சநீதிமன்றம் எந்த கேள்வி எழுப்பவில்லை. எனவே, யார் மீது தவறு, யாரால் உயிர்ப்பலி ஏற்பட்டது என்பதை சொல்ல அருணா ஜெகதீசன் ஆணையத்திற்கு உரிமை உள்ளது. அந்த ஆணையம் தொடர்ந்து விசாரணை நடத்தும். சென்னை உயர்நீதிமன்ற உத்தரவில் தமிழக அரசின் தலையீடு இல்லை. உயர்நீதிமன்ற உத்தரவில் அரசு தலையிட்டதாக தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜூன் கூறியிருந்தால், அது நீதிமன்ற அவமதிப்பாகும். இவ்வாறு வழக்கறிஞர் பி. வில்சன் தெரிவித்தார்.
