கரூர்: மக்கள் குறைதீர் கூட்டம்
கரூர், செப். 15- கரூர் மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் மீ. தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு காணவும், அடிப்படைத் தேவைகளுக்கு முக்கியத்துவம் அளித்திடவும், பெண்களின் முன்னேற்றத்திற்கு தேவையான நடவடிக்கைகள் உள்ளிட்ட பணிகளில் அரசு அலுவலர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். குறிப்பாக பொதுமக்கள் ஒருமுறை வழங்கிய மனுக்கள், மீண்டும் வராத வகையில் மனுவின் மீது உரிய தீர்வு வழங்கப்படுவதை அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில், இன்றைய தினம் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா உட்பட அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 429 மனுக்கள் வரப்பெற்றன. இதில் மாற்றுத் திறனாளிகள் எவ்வித சிரமமும் இன்றி மனுக்களை வழங்கும் வகையில் மாவட்ட ஆட்சியரகத்தின் தரை தளத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கென நடத்தப்பட்டு வரும் குறைதீர் முகாமில் வீட்டுமனைப் பட்டா, உதவி உபகரணங்கள், பராமரிப்பு உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து அளிக்கப்பட்ட 44 மனுக்களைப் பெற்று, உரிய நடவடிக்கை மேற்கொள்ள தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் மீ. தங்கவேல் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பாக
2 நபர்களுக்கு ரூ.6,570 மதிப்பீட்டிலான காதொலி கருவிகள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பாக 5 பயனாளிகளுக்கு நலவாரிய அடையாள அட்டைகள் என மொத்தம் 7 பயனாளிகளுக்கு, நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
