tamilnadu

திருச்சி விரைவு செய்திகள்

கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி  பிறந்தநாள் விழா

பாபநாசம், செப். 6-  தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வ.உ.சி பேரவை சார்பில், கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் 154 ஆவது பிறந்தநாள் விழா நடந்தது.  பாபநாசம் நகரத் தலைவர் ராமராஜ் தலைமை வகித்தார். நகரச் செயலாளர் சாமிநாதன், நகரப் பொருளாளர் கோவிந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  இதில் மாநில பொதுச் செயலர் மைதீன் சாமிநாதன் பங்கேற்று வ.உ.சிதம்பரம் பிள்ளை உருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார். இதில் மாநில துணைப் பொதுச் செயலாளர் சூரியகுமார், லயன்ஸ், ரோட்டரி சங்க நிர்வாகிகள் பலர் கலந்துக் கொண்டனர்.

தோவாளை மலர்சந்தையில்  அத்தப்பூ கோலம்

நாகர்கோவில், செப்.6-  குமரி மாவட்டம் தோவாளை மலர்சந்தையில் 500 கிலோ மலர்களைக் கொண்டு ஓணத்திற்கான அத்தப்பூ கோலம் போட்டனர். கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் பூ வியாபாரிகள் இணைந்து ஓணம் பண்டிகைக்கு விற்பனைக்கு வந்து மீதமுள்ள பூக்களை கொண்டு கேரள மன்னர் மாவேலி சக்கரவர்த்தி  உருவத்தை பூக்கோலமிட்டு ஓணம் பண்டிகையை கொண்டாடினர். சுமார் 500 கிலோ மலர்களை கொண்டு, 100 பூ வியாபாரிகள் இணைந்து இந்த அத்தப்பூ மாவேலி சக்கரவர்த்தி பூக்கோலம் போட்டுள்ளனர். தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக போடப்பட்டுள்ள  பிரம்மாண்டமான பூக்கோலத்தை ஏராளமான பொதுமக்கள், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பார்வையிட்டனர்.

பட்டுக்கோட்டையில் தென்னை விவசாயிகள் சங்கமம் - கருத்தரங்கம்

தஞ்சாவூர், செப். 6-  தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வசந்தம் மகாலில், வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி நிலையம் மற்றும் கும்பகோணம், ஸ்கைவின் குழுமம் இணைந்து நடத்திய “தென்னை விவசாயிகளின் சங்கமம்’’ நிகழ்ச்சியில் “தென்னை சாகுபடியில் மகசூலை அதிகரிக்க ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை’’ பற்றிய கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.  இவ்விழாவில், வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி நிலையம் இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் கை.குமணன் வரவேற்றார். தஞ்சாவூர், தோட்டக்கலை துணை இயக்குநர் அ.வெங்கட்ராமன், வேளாண்மை இணை இயக்குநர் கோ.வித்யா வாழ்த்திப் பேசினர்.  கேரள மாநிலம் காசர்கோடு மத்திய தோட்டப்பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனம், அனைத்திந்திய ஒருங்கிணைந்த பனை மற்றும் தோட்டப்பயிர்கள் ஆராய்ச்சி திட்டம் தேசியத் திட்ட ஒருங்கிணைப்பாளர், முனைவர் போ.அகஸ்டின் ஜெரார்டு, கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், முதன்மையர் முனைவர். வெங்கடேசன் ஆகியோர் பங்கேற்றனர். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக துணைவேந்தர் (பொ) மற்றும் பதிவாளர் முனைவர். இர. தமிழ் வேந்தன், தென்னையில் ஊடுபயிர் சாகுபடி மற்றும் தென்னையில் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களால் விவசாயிகளின் வருமானத்தை பெருக்குவதைப் பற்றியும் தென்னை விவசாயத்தில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் பங்கு பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார்.  கும்பகோணம், ஸ்கைவின் குழும நிர்வாக இயக்குநர் மு.மோகன், தென்னையில் கடற்பாசியின் முக்கியத்துவம் மற்றும் பயன்கள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். தென்னை ரகங்கள் மற்றும் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை, தென்னையில் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மை பற்றிய தொழில் நுட்ப உரைகள் வேப்பங்குளம், தென்னை ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் கை.குமணன், நா.முத்துக்குமரன், ம.சுருளிராஜன் ஆகியோரால் வழங்கப்பட்டது. விஞ்ஞானி ந.செந்தில்குமார் நன்றி கூறினார்.