நிகரென்று கொட்டு முரசே!
இரண்டு நதிகள் ஓரிடத்தில் சங்கமிப்பதைப்போன்று தமிழ்நாடு-கேரளா இரண்டு மாநிலங்களின் எல்லைகள் சந்திக்கும் மையப்புள்ளியாகத் திகழ்கிறது மார்த்தாண்டம். தமிழும் மலையாளமும் கலந்த நாகர்கோவில் தமிழ் மதுரை மல்லிகையைப் போல் மணம் வீசிக்கொண்டிருப்பது மார்த்தாண்டத்தின் சிறப்பாகும். “தேன்” உற்பத்தியில் முதலிடம் பிடித்திருக்கும் இந்நகரத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் 17வது மாநில மாநாட்டை நடத்துவது இன்னொரு இனிமையான செய்தி. களைகட்டிய தயாரிப்பு பணிகள் பலவண்ணங்களில் தீட்டப்பட்ட அழகான விளம்பரங்கள் மாநில மாநாட்டின் சிறப்பை எடுத்துக்காட்டின. “நிகரென்று கொட்டு முரசே” என்ற வாசகம் தாங்கிய வீரப்பெண் சிற்பத்திற்குமுன் மாணவர்கள் கூட்டமாக நின்று செல்ஃபி எடுத்துக்கொள்ளும் காட்சி மகிழ்ச்சியாக இருந்தது. மென்மையான தூறலும் மாலை நேரக் காற்றும் நகரத்தின் இயற்கை எழிலை கவிதையைப் போல் சொல்லிக்கொண்டிருந்தன. களியல் பகுதியில் ஜனநாயக மாதர் சங்கப் பெண்கள் குழுமியிருந்தனர். “இது இன்னொரு மாநாடா” என கேட்கக்கூடிய வகையில் பெண்கள் கூடியிருந்தனர். “மாநில மாநாட்டிற்கான தயாரிப்பு மாநாடு” என நகைச்சுவையோடு பகிர்ந்தனர். விக்டோரியா தலைமையில், கடையாலுமூடு பேரூராட்சி தலைவர் ஜூலியட் முன்னிலையில் மாநாட்டுப் பணிகள், பெண்களைத் திரட்டுவது குறித்தும் உரையாடினர். தெருவில் இறங்கிய பெண் பிரதிநிதிகள் முழுக்கோடு கடைவீதியில் வெண்ணிறக் கொடிகளோடு பெண்கள் நிதி வசூலிப்பில் ஈடுபட்டிருந்தனர் 3 முறை ஊராட்சித் தலைவராக, ஒன்றியக் கவுன்சிலராக பணியாற்றிய பேபி உள்ளிட்டவர்கள். “தெருவில் நிதி கேட்பதால் கேலி வருகிறதா?” என்ற கேள்விக்கு ஓங்கிச் சிரித்தனர். “நேற்று பைக்கில் வந்த ஒருவர் எங்களை இடைமறித்தார். ‘எப்படி நீங்கள் வராமல் போகலாம்’ என்று கேட்டு ஐம்பது ரூபாய் உண்டியலில் போட்டார்” என்றனர். வீட்டில் சமைத்தால் பாராட்டு கிடைக்காது, ஆனால் சமூக சேவையில் ஈடுபட்டால் மிகுந்த மரியாதை கிடைக்கிறது என்பதில் உள்ளாட்சி இட ஒதுக்கீட்டின் அரசியல் மாற்றம் தெரிகிறது. ஜனநாயக சபை குருந்தங்கோடு பகுதியில் அன்புச்செல்வி ஜெயராணி தலைமையில் கூட்டம் நடந்தது. ஒவ்வொருவரின் கையிலும் குறிப்பேடும் பேனாவும் வழங்கப்பட்டது. “இடைக்கமிட்டி கூட்டத்தில் குறிப்பெடுக்க வேண்டாமா” என்றனர். இந்தக் கூட்டங்கள் மாதா மாதம் நடக்கின்றன. பெண்களின் அரசியல், சமூகப் பணிக்கு இதை விட சிறந்த பயிற்சி வேறெது இருக்க முடியும்? கேப்டன் லட்சுமி வெண்படையின் அணிவகுப்பிற்கு இளம்பெண்களை தயார் செய்வது குறித்தும் விவாதித்தார்கள். சட்டமன்றம் நாடாளுமன்றத்தில்தான் மக்கள் பிரச்சனைகளை விவாதிப்பார்களா? ஜனநாயகப் பண்புகளை, மக்களின் பிரச்சனைகளை இந்தப் பெண்கள் சபை சிறியதாக இருந்தாலும் எத்தனை ஆர்வத்தோடு விவாதிக்கிறார்கள். பழமையான மூடநம்பிக்கைகளைப் புறந்தள்ளி பெண்கள் ஓரிடத்தில் அமர்ந்து விவாதிப்பது சாதாரணமான ஒன்றல்லவே. இதுதான் மிக முக்கியமான ஜனநாயக சபை! உணர்ச்சிமிகு சாட்சியம் அக்கமிட்டியின் மூத்த உழைக்கும் பெண் எழுந்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தோழர் ஹேமச்சந்திரன் படத்தைக் காட்டி, “அவர்தான் எனக்கு அரசுப் பணி வாங்கிக் கொடுத்தார்” என்று குரல் உடைந்து பேசினார். கணவர் மாரடைப்பால் இறந்தபோது இரண்டு பெண் குழந்தைகளும் வயிற்றில் ஒரு குழந்தையும் இருந்த நிலையில், கருணை அடிப்படையில் அரசுப் பணி பெற்றுக் கொடுத்தார் தோழர் ஜே.எச். தன்னந்தனியாக பிள்ளைகளை வளர்த்து, இன்று மூவரும் அரசு அதிகாரிகளாக இருப்பதை சொன்னபோது, ஒரு பெண் குடும்பத்திற்குத் தலைமை தாங்கி எப்படிப்பட்ட சாதனை நிகழ்த்த முடியும் என்பதற்கு சாரதா பாய் முன்னுதாரணமாக நின்றார். பெண்களின் உழைப்பை மட்டுமல்ல, அவர்களது சாதனைகளையும் மறைக்கிறது இந்த ஆணாதிக்க சமூகம். வலுவான பிரதிநிதித்துவம் மேல்புறம் வட்டார பகுதியில் வனஜா குமாரி, டயானா கிறிஸ்டி, சைலஜா, கேத்தரின் எஸ்தர் டானி போன்ற, உள்ளாட்சி அமைப்புகளில் சிறப்பாகப் பணியாற்றிய பெண்கள் கூடியிருந்தனர். குறிப்பாக கேத்தரின் எஸ்தர் டானி ஐந்து முறை தொடர்ச்சியாக பேரூராட்சி கவுன்சிலராக இருந்தவர். ஹெலன் இடைக்கோடு பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர். பந்தல் விளை, மாத்தூர்கோணம், அம்பலக்கடை போன்ற பகுதிகளில் கூட்டங்களை நடத்தி மாநாட்டிற்குத் தயாராகிக்கொண்டிருந்தார்கள். அடைக்காகுழியில் 4 முறை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட டி.டி.ரெஜி, பெண்களின் சகோதரனாக ஓடியாடி வேலை செய்துகொண்டிருந்தார். மக்கள் பிரதிநிதிகள் மக்களோடு எளிமையாக, மீனும் நீரும் போல் இருக்க வேண்டும் என்ற கோட்பாட்டை சரியாகக் கடைப்பிடிக்கிறார்கள். மாநாட்டின் நோக்கங்கள் மதவெறியை வேரோடு சாய்ப்போம், பெண்கள் மற்றும் குழந்தைகளின் மீதான வன்முறையற்ற தமிழ்நாட்டை உருவாக்குவோம் என்ற முன்மொழிவுகளோடு இம்மாநாடு பெண்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது. உடல் ஆரோக்கியம் பெண்களின் உரிமை என்ற முழக்கத்தை முன்வைத்துள்ளது. பெண்களுக்கான சிறப்பு மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்கள், உயர்கல்வி வேலைவாய்ப்பு, தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களுக்கு மாத ஊதியம் ரூ.30,000, சாதி ஆணவப் படுகொலை தடுப்புச் சட்டம், டெட் தேர்வெழுதிய பெண்களுக்கு ஆசிரியர் பணி, ஒப்பந்த முறையை ஒழித்தல், உழைக்கும் பெண்களுக்கான தோழி விடுதி, நூறு நாள் வேலைத் திட்ட ஊதியத்தை ரூ.600ஆக உயர்த்துதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை மாநாடு முன்வைக்கிறது. 7 லட்சம் பெண்களை உறுப்பினர்களாகக் கொண்ட இச்சங்கத்தின் 17ஆவது மாநாட்டில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், அகில இந்திய தலைவர்கள் பி.கே.ஸ்ரீமதி, சுதா சுந்தரராமன், உ.வாசுகி, பி.சுகந்தி, சி.எஸ்.சுஜாதா, மாநிலத் தலைவர்கள் எஸ்.வாலண்டினா, அ.ராதிகா, ஜி.பிரமிளா, எஸ்.கே.பொன்னுத்தாய், உஷா பாசி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.லீமாறோஸ், வரவேற்புக்குழு தலைவர் டாக்டர் லேகா உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள். செப்டம்பர் 24 முதல் 27 வரை நடைபெறும் இம்மாநாட்டில் பங்கேற்க தமிழ்நாடெங்கும் அலையலையாகப் பெண்கள் மார்த்தாண்டம் நோக்கி வர இருக்கிறார்கள். நீரின்றி அமையாது உலகு. பெண்ணே! நீயின்றியும் இயங்காது இவ்வுலகு! ஆர்ப்பரித்து வாரீர்!