ஆலக்குடி கிராமத்தில் அரசு திட்டங்கள் குறித்த ஒருங்கிணைந்த சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
தஞ்சாவூர், செப்.18- ஒன்றிய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும், தஞ்சாவூர் மத்திய மக்கள் தொடர்பு அலுவலகம், ஒருங்கிணைந்த சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை, தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றியம், ஆலக்குடி கிராமத்தில் ஏற்பாடு செய்திருந்தது. தஞ்சாவூர் மத்திய மக்கள் தொடர்பு அலுவலகத்தின் கள விளம்பர உதவியாளர் ரவீந்திரன் நிகழ்ச்சி குறித்த நோக்கத்தை எடுத்துரைத்தார். தலைமையுரையாற்றிய மத்திய மக்கள் தொடர்பகத்தின் சென்னை மண்டல உதவி இயக்குநர் பாலநாகேந்திரன், நாடு முழுவதும் இதுபோன்ற ஒருங்கிணைந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியினை மத்திய மக்கள் தொடர்பகம் நடத்திக் கொண்டிருக்கிறது. இதில், பொதுமக்கள் கலந்து கொண்டு அரசு திட்டங்களை பற்றிய விழிப்புணர்வை பெறவேண்டும் என்று கேட்டுக் கொண்டார். தஞ்சாவூர் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின், மாவட்ட திட்ட அலுவலர் அனுசியா சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியை முன்னிட்டு அரசு திட்டங்கள் குறித்த பிரசுரங்கள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டன. ஊட்டச்சத்து குறித்த கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. ஒன்றிய அரசின் பதிவு பெற்ற கலைக் குழுவினரால், விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது. நிகழ்ச்சியில், ஆலக்குடி ஊராட்சி செயலாளர் சண்முகநாதன் நன்றி கூறினார்.