பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துக! ஓய்வூதிர்கள் சங்க மாநாடு வலியுறுத்தல்
பெரம்பலூர், செப்.25- நீட்டிக்கப்பட்ட ஓய்வூதிய வயதினை மீண்டும் 58 வயதாக நிர்ணயம் செய்து, படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்க வேண்டும் என அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. பெரம்பலூரில் புதன்கிழமை நடைப்பெற்ற தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் 5 வது மாவட்ட மாநாட்டிற்கு மாவட்டத் தலைவர் ஆளவந்தார் தலைமை வகித்தார். மாநில பணி நிறைவு சிவில் சர்வீஸ் அதிகாரிகள் சங்க மாவட்ட தலைவர் ராஜேந்திரன் மாநாட்டை தொடங்கி வைத்தார். மாவட்டச் செயலாளர் சின்னசாமி வேலை அறிக்கையையும், மாவட்டப் பொருளாளர் நிதி நிலை அறிக்கையையும் வாசித்தனர். வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்டத் தலைவர் பாரதிவளவன், மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் சங்க முன்னாள் பொருளாளர் மாணிக்கம் ஆகியோர் பேசினர். சிறப்பு விருந்தினராக மாநில துணைத் தலைவர் இளமாறன் கலந்துகொண்டு பேசினார். இதில், 70 வயது பூர்த்தியடைந்த ஓய்வூதியர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தினை தேர்தல் வாக்குறுதிப்படி நடைமுறைப்படுத்த வேண்டும். நீட்டிக்கப்பட்ட ஓய்வூதிய வயதினை மீண்டும் 58 வயதாக நிர்ணயம் செய்து படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், மாவட்ட நிர்வாகிகள் மகேஸ்வரன், நீலமேகம், தமிழன்பன், விஜயராமு உட்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக, மாவட்ட துணைத் தலைவர் இளவரசன் வரவேற்றார். முடிவில் மாவட்ட இணைச் செயலாளர் பரமசிவம் நன்றி கூறினார்.
