tamilnadu

திருச்சி விரைவு செய்திகள்

விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய  தோட்டக்கலை துறை அழைப்பு

பெரம்பலூர், ஆக. 23-  காரீப் பருவத்தில், சின்ன வெங்காயம் மற்றும் தக்காளி பயிருக்கு வருகிற செப்டம்பர் 1 ஆம் தேதிக்குள்ளும் மற்றும் வாழை, மரவள்ளி, மஞ்சள் பயிர்களுக்கு செப்டம்பர் 16 ஆம் தேதிக்குள்ளும் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம். எனவே, அனைத்து விவசாயிகளும் உரிய காலத்தில் பயிர் காப்பீடு செய்து, இயற்கை இடர்பாடுகளால் மகசூல் இழப்பு ஏற்படும் பட்சத்தில் பயிர் காப்பீட்டு தொகையைப் பெற்று பயன்பெறலாம்.  சின்ன வெங்காயப் பயிருக்கு, ஏக்கருக்கு ரூ.2,128, தக்காளி பயிருக்கு ஏக்கருக்கு ரூ.915, வாழை பயிருக்கு ஏக்கருக்கு ரூ.3,576, மரவள்ளி பயிருக்கு ஏக்கருக்கு ரூ.1,335, மஞ்சள் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.3,711, பிரீமியம் தொகை பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம். விவசாயிகள் அனைவரும் நடப்பில் உள்ள சேமிப்பு கணக்கு புத்தக முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல், நில உரிமை பட்டா, சிட்டா, நடப்பு பருவ அடங்கல், சர்வே எண் மற்றும் உட்பிரிவு, பயிரிட்டுள்ள நிலம் இருக்கும் கிராமம் ஆகிய விவரங்களை சரியாக அளித்து, பதிவு செய்தவற்கு உரிய ஆவணங்களுடன் அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், பொது சேவை மையங்கள் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாக உரிய பிரீமியத் தொகையை செலுத்தி, பயிர் காப்பீடு செய்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் அருண் ராஜ் தெரிவித்துள்ளார்.

மஞ்சளாறு பாசனக் கால்வாய்களை தூர்வாருக! குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் சங்கம் கோரிக்கை

திண்டுக்கல், ஆக.23- புதர்மண்டிக்கிடக்கும் மஞ்சளாறு பாசனக்கால்வாய்களை மாவட்ட நிர்வாகம் தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் வெள்ளியன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆட்சியர் சரவணன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.  தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் நிலக்கோட்டை ஒன்றியத்தலைவர் ஏ.பாலசுப்ரமணியம் பேசுகையில், நிலக்கோட்டை தாலுகாவில் மஞ்சளாறு அணையின் மூலம் ஆலங்குளம் கால்வாயின் வழியாக சிறுகுளம், பொட்டைக்குளம், பிள்ளையார்நத்தம் கண்மாய், எத்திலோடு கண்மாய்,ஆவரம்பட்டி கண்மாய், மட்டப்பாறைக் கண்மாய், துரைக்குளம், ரெட்டிகுளம் ஆகிய நீர்நிலைகளால் விவசாயிகள்  பாசன வசதி பெறுகிறார்கள். இந்த நீர்நிலைகள் அனைத்தும் தற்போது புதர்மண்டி, சீமைக்கருவேல் முள் படர்ந்துகிடக்கின்றன. தென்மேற்கு பருவமழை துவங்குவதற்குள் இந்த நீர்நிலைகளை தூர்வார மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்.  இதன் மூலம் ஒரு போக சாகுபடி செய்யும் விவசாயிகளையும், இப்பகுதி மக்களின் குடிநீர் ஆதாரத்தையும், ஆயிரக்கணக்கான கால்நடைகளையும் பாதுகாத்திட முன்வர வேண்டும் என்று வலியுறுத்தினர்.  இதனையடுத்து கோரிக்கைகளை மனுவாக ஆட்சியரிடம் வழங்கினார்.

உயர் கல்விக்குப் படி முகாம்: தஞ்சாவூர் மாவட்டத்தில்  இரு கட்டங்களாக நடக்கிறது

தஞ்சாவூர், ஆக. 23-  தமிழக அரசின் உத்தரவுக்கிணங்க, நூறு சதவீதம் உயர்கல்வி சேர்க்கை உறுதி செய்யும் நோக்கில், தஞ்சாவூர் மாவட்டத்தில் அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 2024-25 ஆம் கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு பயின்று தேர்ச்சி பெற்ற, தேர்ச்சி பெறாத, தேர்வு எழுதாத, இடைநின்ற மாணவர்களில் உயர்கல்விக்கு விண்ணப்பிதது, பல்வேறு காரணங்களினால் கல்லூரியில் சேராத மாணவர்களுக்கு உயர்கல்வி படிப்பைத் தொடர உரிய ஆலோசனைகள் மற்றும் உடனடி சேர்க்கை வழங்குவதற்காக, நான் முதல்வன் உயர்கல்வி வழிகாட்டி திட்டத்தின் கீழ் “உயர்வுக்குப்படி 2025” முகாம், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, 25.08.2025 மற்றும் 04.09.2025 ஆகிய தேதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசுக் கல்லுரியிலும், 29.08.2025 மற்றும் 10.09.2025 ஆகிய தேதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கும்பகோணம் சரஸ்வதி பாடசாலையிலும், 02.09.2025 மற்றும் 12.09.2025 ஆகிய நாட்கள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மாதிரி மேல்நிலைப் பள்ளியிலும் நடைபெற உள்ளது. இம்முகாமில் 12 ஆம் வகுப்பு பயின்று தேர்ச்சி பெற்ற, தேர்ச்சி பெறாத, தேர்வு எழுதாத, இடைநின்ற மாணவர்களில் உயர்கல்விக்கு விண்ணப்பித்து பல்வேறு காரணங்களினால் கல்லூரியில் சேராத மாணவர்களுக்கு கலைக்கல்லுரிகள், பாலிடெக்னிக் மற்றும் ஐடிஐ-க்களில் நேரடி சேர்க்கைக்கான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், கல்விக் கடன் மற்றும் கல்வி உதவித் தொகை குறித்த வழிகாட்டுதல்கள் வழங்கப்பட உள்ளது. இம்முகாமில் உயர்கல்வியில் சேர விருப்பமுள்ளவர்கள் பங்கேற்று பயனடையலாம். மேலும், முகாமின்போது மாணவர்கள் ஆதார் அட்டை, பள்ளிச் சான்றிதழ்கள் மற்றும் சாதிச் சான்றிதழ் ஆகியவற்றை எடுத்து வருமாறு மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.