நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனை கண்டித்து உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் போராட்டம்
உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனை கண்டித்து திங்களன்று (ஜூலை 28) தமிழகம் முழுவதும் நீதிமன்றங்கள் முன்பு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் மீது உச்சநீதிமன்ற நீதிபதியிடம் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் புகார் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீது, நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார். இதற்கு முன்னாள் நீதியரசர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். நீதிபதியின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து, சென்னை உயர்நீதிமன்றம் முன்பு அனைத்து வழக்கறிஞர்கள் சங்க கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மூத்த வழக்கறிஞர் விஜயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், “நீதிமன்ற அவமதிப்பு வழக்கை கைவிட வேண்டும், இந்தப் பிரச்சனையில் உச்சநீதிமன்றம் தலையிட வேண்டும்” என வலியுறுத்தப்பட்டது.