அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ரொக்கப் பரிசு வழங்கிய முன்னாள் மாணவர்
பொதுத்தேர்வில் முதலிடம்
தஞ்சாவூர், ஜூலை 7- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவரும், ஓய்வு பெற்ற பொறியாளருமான, கவிஞர் பாலச்சேரிக்காடு அர.தங்கராசன். இவர் தான் படித்த பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், பத்தாம் வகுப்பு, பதினோராம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில், முதல் மற்றும் இரண்டாம் இடம் பெறும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் ரொக்கப் பரிசினை வழங்கி வருகிறார். இதற்காக வங்கியில் பள்ளித் தலைமையாசிரியர் மற்றும் தன் பெயரில் கூட்டாக, ரூ.3 லட்சத்தை நிரந்தர வைப்பு நிதியாக வைத்து அதிலிருந்து வரக்கூடிய வட்டித் தொகை மூலம், பரிசுத் தொகையை ஒவ்வொரு வருடமும் வழங்கிக் கொண்டு இருக்கிறார். அதேபோல், திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், 10 ஆம் வகுப்பு தேர்வில் முதலிடம் பெற்ற மாணவர் அ. அவினாஸுக்கு, ரூ.5,000, இரண்டாம் இடம் பெற்ற மாணவர் மா.கோகுலனுக்கு ரூ.2,000, 11 ஆம் வகுப்பு தேர்வில் முதலிடம் பெற்ற மாணவர் நே. ஆதிஷ்டனுக்கு ரூ.5,000, இரண்டாம் இடம் பெற்ற மாணவர் கீதனுக்கு ரூ.2,000, 12 ஆம் வகுப்பு தேர்வில் முதலிடம் பெற்ற மாணவர்கள் கே.ஆதித்யன், எஸ்.கௌதம் ஆகியோருக்கு தலா ரூ.5,000, இரண்டாம் இடம் பெற்ற மாணவர் ஜி.நித்திஸுக்கு ரூ.2,000 என மொத்தம் ரூ.26,000 ஐ முன்னாள் மாணவரான அர.தங்கராசன் வழங்கினார். இந்த நிகழ்விற்கு பள்ளித் தலைமை ஆசிரியர் சி.மாரிமுத்து தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் கா.சோழ பாண்டியன் வரவேற்றார். பட்டதாரி ஆசிரியர் சா. அடைக்கல மணி நன்றி கூறினார்.