நாட்டுப்புறப் பாடகர் கவிஞர் வளப்பக்குடி வீரசங்கருக்கு கலைமாமணி விருது
தஞ்சாவூர், அக். 14- தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் மூலம், தமிழகத்தின் தலைசிறந்த கலைஞர்களைத் தேர்வு செய்து வழங்கப்படும் “கலைமாமணி’’ விருதை நாட்டுப்புறப் பாடகர் கவிஞர் வளப்பக்குடி வீரசங்கருக்கு, சனிக்கிழமை சென்னையில் நடைபெற்ற விழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். நாட்டுப்புறப்பாடல் துறையில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வரும் பன்முக பரிமாணங்கள் நிறைந்த வீரசங்கர் அனைத்து வகையிலும் தகுதி மிக்க கலைஞராக விளங்கி வருகிறார். இவர் 400 பாடல்களுக்கு மேல் இயற்றி, இசையமைத்துள்ள பாடி பல யூடியூப் சேனல்களில் அவை வெளிவந்துள்ளன. “கலைஞர் புகழ்பாடல்கள் நூறு’’ “சோழ மண்டல நாட்டுப்புறப் பாடல்கள்’’, “நாட்டுப்புறப் பாட்டுக் களஞ்சியம்’’ என்னும் நூல்களைப் படைத்துள்ளார். 2020 இல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் “அகவை முதிர்ந்த தமிழறிஞர்’’ விருது பெற்றவர். பல நாட்டுப்புற பாடகர், பாடகியரை உருவாக்கியவர். தற்போது திருவையாறு அரசு இசைக் கல்லூரியில் இசை நாடகத் துறையின் பகுதிநேர சிறப்பாசிரியராக பணியாற்றி வருகிறார்.
அரசுப் பள்ளி மாணவர்களுடன் ஆட்சியர் கலந்துரையாடல்
நாகர்கோவில், அக்.14- கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அரசு மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவர்களின் கற்றல் திறன் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா மாணவ, மாணவியர்களை நேரில் சந்தித்து கலந்துரையாடினார். அப்போது ஆட்சியர் தெரிவிக்கையில், வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு மாணவர்கள் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு. தங்களது திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். எனவே திறன் வளர்த்தலில் முக்கிய கவனம் செலுத்தி திறன்மிக்க மாணவர்களாய் வெளிவர தங்களது முழு நேரத்தையும் செலவிட வேண்டும். பள்ளிகளில் வழங்கப்படுகிற உயர்கல்வி சார்ந்த வழிகாட்டுதல்களை முழுமையாக உள்வாங்கிக்கொண்டு, அதற்கு ஏற்றாற்போல் சிறந்த உயர் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறுவதற்கு மாணவர்கள் தயாராக வேண்டும். அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி பெற செய்யும் நோக்கில் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் முழுமூச்சாக செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் முதல்வருக்கு கடிதம் எழுதும் இயக்கம்
நாகப்பட்டினம், அக். 14- தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் சார்பாக, நாகப்பட்டினம் மாவட்டத்தில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் செவிலியர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரியும் இயக்கம் மற்றும் முதல்வருக்கு கடிதம் எழுதும் இயக்கமும் நடைபெற்றது. சம வேலைக்கு சம ஊதியம் வழக்கு மேல் முறையீட்டை கைவிட வேண்டும், தேர்தல் வாக்குறுதி 356-ன் படி தொகுப்பூதிய செவிலியர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மாவட்டத் தலைவர் ஜெயபாரதி, மாவட்டச் செயலாளர் வினோதினி, மாவட்டப் பொருளாளர் கலைச்செல்வி மற்றும் மாநில இணைச் செயலாளர் ராம்குமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் 150-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பங்கேற்றனர்.