கடலில் மிதந்த கஞ்சா பொட்டலம் காவல் படையினரிடம் ஒப்படைத்த மீனவர்
புதுக்கோட்டை, செப். 11- கடலில் மிதந்து கொண்டிருந்த 40 கிலோ கஞ்சா பொட்டலத்தை, புதுக்கோட்டை புதுக்குடியைச் சேர்ந்த மீனவர் எடுத்து வந்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தார். புதுக்கோட்டை மாவட்டம் புதுக்குடியைச் சேர்ந்தவர் மீனவர் ராம்கி. இவர் தனது பைபர் படகில் வியாழக்கிழமை காலை மீன்பிடிக்க கடலுக்குச் சென்றார். தஞ்சாவூர் மாவட்ட எல்லைக்கு எதிரில் 6 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, பெரிய பிளாஸ்டிக் பார்சல் ஒன்று மிதந்து கொண்டிருப்பதைக் கண்டார். அதனை எடுத்த அவர், உள்ளே பிரித்துப் பார்த்த போது 20 சிறிய பார்சல்கள் உள்ளே இருப்பதைக் கண்டார். இதைத் தொடர்ந்து புதுக்கோட்டை கடலோரக் காவல் படையினருக்கு அவர் தகவல் தெரிவித்துவிட்டு, கரைக்கு கொண்டு வந்தார். கரையில் அதனை சோதித்துப் பார்த்தபோது அதில் சுமார் 40 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து மத்திய சுங்கத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறை மற்றும் கடலோரக் காவல்துறையினரின் முன்னிலையில் அந்த கஞ்சா பொட்டலங்கள் சுங்கத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதனை அவர்கள், தங்களின் திருச்சி அலுவலகத்துக்கு கொண்டு சென்று தொடர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.