3 குடிசை வீடுகளில் தீ விபத்து வீட்டு உபயோகப் பொருட்கள் சேதம்'
நாமக்கல், ஜூலை 10- நாமக்கல் பழைய பேருந்து நிலையம் அருகே 3 குடிசை வீடுகளில் ஏற்பட்ட தீ விபத்தில், ஆடைகள், வீட்டு உபயோகப் பொருட்கள் தீக்கிரையாகின. நாமக்கல் பழைய பேருந்து நிலையம் அருகே மேட்டுத் தெரு பகுதியில் குடிசைகள் மற்றும் சிமெண்ட் வீடுகள் கொண்ட குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில், அப்பகுதியில் புதனன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் 3 குடிசை வீடுகள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன. இதுகுறித்த தகவலறிந்து வந்த நாமக்கல் தீயணைப்பு மீட்புப்பணிகள் துறையினர் தீயை அணைக்க முயன்றனர். ஆனால், தீ அதிகமாக எரிந்ததால், மேலும் 2 தீயணைப்பு வாகனங்களை கொண்டு வந்து, அரை மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். இதையடுத்து நடைபெற்ற விசாரணையில், உச்சி வெயில் அதிகமாக காணப்பட்ட நிலையில், மேட்டுதெரு பகுதியைச் சேர்ந்த பாப்பாத்தி அம்மாள் என்பவரின் வீட்டில் மின்கசிவு ஏற்பட்டு தீப்பிடித்துள்ளது. தொடர்ந்து, அருகிலிருந்த மற்றொரு பாப்பாத்தி அம்மாள், வெள்ளையம்மாள் ஆகியோரின் குடிசை வீடுகளிலும் தீ பரவி, கொழுந்து விட்டு எரிந்துள்ளதும் தெரியவந்துள்ளது. இவ்விபத்து ஏற்பட்டபோது அந்த குடிசை வீடுகளில் இருந்தவர்கள் வெளியே சென்று விட்டதால், உயிரிழப்புகள் ஏற்படவில்லை. ஆனால், வீடுகளிலிருந்த வீட்டு உபயோக பொருட்கள், துணிகள், மின்னணு சாதனங்கள் உள்ளிட்டவை தீக்கிரையாகின. இவ்விபத்து குறித்து நாமக்கல் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.