tamilnadu

பாமகவில் தந்தை - மகன் மோதல் உச்சம் ஜி.கே. மணியை நீக்க அன்புமணி கடிதம்!

பாமகவில் தந்தை - மகன் மோதல் உச்சம் ஜி.கே. மணியை நீக்க அன்புமணி கடிதம்!

சென்னை, செப். 25 - பாமக நிறுவனர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே நீடித்து வரும் மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.  கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக கூறி, அன்புமணியை பாமகவிலிருந்து நீக்கி பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்திருந்தார். ஆனால், அன்புமணியை கட்சியிலிருந்து நீக்க ராமதாசுக்கு அதிகாரம் இல்லை என்றும், 2026 ஆகஸ்ட் வரை அன்புமணியே கட்சியின் தலைவர் என்று அன்புமணி தரப்பு கூறியது. அத்துடன், தேர்தல் ஆணையம் தன்னையே பாமக தலைவராக அங்கீகரித்துள்ளதாகவும் கூறிய அன்புமணி, பாமக கொறடாவாக உள்ள சேலம் தொகுதி எம்எல்ஏ அருளை கொறடா பதவியில் இருந்து நீக்க வேண்டும் என ஏற்கெனவே சபாநாயகருக்கு கடிதம் எழுதியிருந்தார்.  அக்டோபர் 14 அன்று சட்டப்பேரவை கூடவுள்ள நிலையில், பாமகவின் சட்டமன்ற கட்சித் தலைவர் பதவியிலிருந்து ஜி.கே. மணியை நீக்கியுள்ளதாகவும் கடிதம் அளித்துள்ளார். அவருக்குப் பதில் வெங்கடேஸ்வரனும், துணைத் தலைவராக சதாசிவமும், கொறடாவாக மயிலம் சிவக்குமாரும் நியமிக்கப்பட்டு உள்ளதாக சட்டப்பேரவைச் செயலரிடம் கடிதம் அளித்துள் ளார். பாமக-வின் 5 எம்எல்ஏ-க்களில் 3 பேர் அன்பு மணியையும், 2 பேர் ராமதாஸையும் ஆதரிக்கின்றனர்.