ஜூலை 18 இல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
புதுக்கோட்டை, ஜூலை 13- புதுக்கோட்டை மாவட்டம் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஜூலை 18 அன்று காலை 10 மணியளவில் புதுக்கோட்டை ஆட்சியரகத்தில் நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியர் மு.அருணா தலைமையில் நடைபெற உள்ள இக்கூட்டத்தில் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு பதில் அளிக்க உள்ளனர். எனவே, விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு தங்களது பயிர் சாகுபடிக்குத் தேவையான நவீன தொழில்நுட்பங்கள், மானியங்கள் உள்ளிட்ட விவரங்களை தெரிந்துகொள்வதுடன், தங்கள் கோரிக்கைகளைத் தெரிவித்து பயனடையயுமாறு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பருத்தி மறைமுக ஏலம்
பாபநாசம், ஜூலை 13- வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் கீழ் இயங்கி வரும் பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் நடந்தது. மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டத்தின்கீழ், நடந்த பருத்தி மறைமுக ஏலத்தில் பாபநாசம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 1,724 விவசாயிகள், ரூ.1,93,33,067 மதிப்பிலான 2,681 குவிண்டால் பருத்தியை எடுத்து வந்தனர். இதில் கும்பகோணம், செம்பனார் கோவில், பண்ருட்டி, விழுப்புரம், ஆந்திரா ஆகிய 12 வணிகர்கள் கலந்து கொண்டு அதிக பட்சம் பருத்தி கிலோ ஒன்றிற்கு ரூ.76.89, குறைந்தபட்சம் ரூ.68, சராசரி ரூ.71 என விலை நிர்ணயித்தனர். கண்காணிப்பு அலுவலர் சந்திரமோகன் தலைமையில் நடந்த பருத்தி ஏலத்திற்கான முன்னேற்பாடு பணிகளை விற்பனைக் குழு பணியாளர்கள் மேற்கொண்டனர்.
ஆவணத்தாங்கோட்டை பள்ளியில் மாணவர்களுக்கு விண்வெளி அறிவியல் பயிற்சி வகுப்பு
அறந்தாங்கி, ஜூலை 13- புதுக்கோட்டை மாவட்டம் ஆவணத்தான்கோட்டை ஊராட்சி ஒன்றியம், மேற்கு நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு, விண்வெளி அறிவியல் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. ஐன்ஸ்டீன் ஹாக்கிங் அறிவியல் மன்றம் சார்பாக இந்த பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. பயிற்சி வகுப்பிற்கு தலைமை ஆசிரியர் கலைச்செல்வி தலைமை தாங்கினார். ஆசிரியர் பாஸ்கரன் வரவேற்றார். வகுப்பின் தொடக்கத்தில் மாணவர்கள் நவீன தொலைநோக்கி மூலம் சூரியன் மற்றும் அதில் உள்ள கரும்புள்ளிகளைப் பற்றி ஆய்வு செய்தனர். பின்னர், அறிவியல் மன்ற ஒருங்கிணைப்பாளர் கலைச்செல்வன் பெருவெடிப்பு கோட்பாடுகள், பால்வெளிகள், நட்சத்திரங்கள், சூரியன், கோள்கள் மற்றும் பூமி உருவாக்கம், உயிரின் தோற்றம் மற்றும் மனிதனின் பரிணாம வளர்ச்சி, விலங்குகளின் வாழ்வியல் ஆகியவை குறித்து மாணவர்களுக்கு விரிவாக விளக்கினார். மாணவர்கள் உற்சாகத்துடன் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டனர். பயிற்சி வகுப்பில் மாவட்ட அமைப்பாளர்கள் கார்த்திக், தீபக் கலந்து ஆலோசனை வழங்கினர். ஆசிரியை மேகலா நன்றி கூறினார். இந்த பயிற்சியினை புதுக்கோட்டை தனியார் தொண்டு அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்தது.
தஞ்சாவூர் முனீஸ்வரன் கோவிலுக்கு 27 அடி உயரத்தில் அரிவாள்
தஞ்சாவூர், ஜூலை 13- தஞ்சாவூரில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் 57 அடி உயர அங்காள முனீஸ்வரன் கோவிலுக்கு 27 அடி உயரத்தில் அமைக்கப்படும் அரிவாளை பக்தர்கள் ஞாயிற்றுக்கிழமை ஊர்வலமாக எடுத்து வந்தனர். அங்காள முனீஸ்வரனுக்காக 216 கிலோ எடையில் 27 அடி உயரம், 3 அடி அகலத்தில் பித்தளை முலாம் பூசப்பட்ட அரிவாள் கும்பகோணத்திலுள்ள சிற்பக் கூடத்தில் வடிவமைக்கப்பட்டது. இந்த அரிவாள் ஞாயிற்றுக்கிழமை தஞ்சாவூருக்கு கிரேன் மூலம் கொண்டு வரப்பட்டது. பின்னர், இந்த அரிவாளை பக்தர்கள் ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்துச் சென்றனர். இக்கோவிலில், செப்டம்பர் 4 ஆம் தேதி திருக்குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளது.