tamilnadu

img

நகர்ப்புற அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டம் விரிவாக்கம்

நகர்ப்புற அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டம் விரிவாக்கம்

அமைச்சர், எம்எல்ஏ, ஆட்சியர் தொடங்கி வைப்பு

அரியலூர், ஆக. 26-  அரியலூர் நகர் பகுதிகளில் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் பயிலக்கூடிய 2,627 மாணவர்கள் பயன்பெறும் வகையில் காலை உணவு திட்டத்தை, போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.  சென்னையில், முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை அரசு உதவி பெறும் தனியார் தொடக்க பள்ளிகளுக்கு விரிவாக்கம் செய்யும் பணியினை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.  இதன்கீழ், அரியலூர் மாவட்டத்தில் தூயமேரி தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், முதலமைச்சரின் காலை உணவு விரிவாக்க திட்டத்தினை தொடங்கி வைத்து, மாணவர்களுடன் அமர்ந்து உணவு உட்கொண்டார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.  மயிலாடுதுறை மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சி பகுதியில் உள்ள தூய ஜான் அரசு உதவி பெறும் துவக்க பள்ளியில், நகர்புற பகுதிகளில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்க விழா, மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தலைமையில், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம். பன்னீர்செல்வம் முன்னிலையில் நடைபெற்றது. கும்பகோணம் கும்பகோணம் கொட்டையூர் வள்ளலார் தொடக்க பள்ளியில், கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க. அன்பழகன் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ், பள்ளிக் குழந்தைகளுக்கு உணவு பரிமாறி தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில், மாநகராட்சி மேயர் சரவணன், துணை மேயர், மாநகரச் செயலாளர் சுப தமிழழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  நாகப்பட்டினம்  நாகப்பட்டினம் நகராட்சியில் 12 அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளிகள், வேதாரண்யம் நகராட்சியில் 08 அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளிகள், தலைஞாயிறு பேரூராட்சியில் 02 அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளிகள், திட்டச்சேரி பேரூராட்சியில் 01 அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி, வேளாங்கண்ணி பேரூராட்சியில் 01 அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி என மொத்தம் 24 பள்ளிகளில் பயிலும் 1,644 மாணவர்கள் பயனடையும் வகையில் காலை உணவு திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் 351 அரசு பள்ளிகளிலும், 124 அரசு உதவிபெறும் பள்ளிகள் என மொத்தம் 475 பள்ளிகளில் பயின்றுவரும் சுமார் 23,119 மாணவ, மாணவியர்கள், முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் மூலம் பயனடைந்து வருகின்றனர். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கே.ஸ்ருதி, வேளாங்கண்ணி பேரூராட்சி துணைதலைவர் தாமஸ் ஆல்வாஎடிசன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்(பொ) எம். ரவிச்சந்திரன், புனித ஆரோக்கிய அன்னை அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் ஏஞ்சல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.