சென்னை மாநகராட்சியில் தூய்மைப்பணி தனியார் மயமாக்குவதை கண்டித்து பணியாளர்கள் முற்றுகை
சென்னை, ஆக. 2 - தூய்மைப்பணி தனி யார்மயமாக்குவதை கண்டித்து வெள்ளியன்று (ஆக.1) தூய்மைப் பணியாளர்கள் சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் போராட்டம் நடத்தினர்.தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுறுத்தி சென்னை மாநகராட்சி செங்கொடி சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. அப்போது மாநகராட்சி இணைச்செயலாளர் ஜெயசீலன், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் கார்த்திகேயன் சங்கத் தலைவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்்தையில் பணி உத்தரவாதம் செய்யப்படும், ஊதியம் முறையாக வழங்கப்படும் என்று உறுதியளித்தார். சென்னை மாநகராட்சி 4, 7, 8 மண்டலங்களை தனியார் மயமாக்கக்கூடாது, தனியாரிடம் விடப்பட்ட மண்டலம் 5, 6 பணியை மாநகராட்சியே ஏற்று நடத்த வேண்டும் என சங்கத்தின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. கோரிக்கைகள் குறித்து பரிசீலிக்கப்படும் என்றார். அதன் பேரில் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது. அடுத்த கட்ட போராட்டம் பின்னர் அறிவிக்கப்படும் என்றார். முன்னதாக போராட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் ஜே.பட்டாபி தலைமை தாங்கினார். சிஐடியு மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் சி.திருவேட்டை,சங்கத்தின் பொதுச் செயலாளர் சீனிவாசலு, துணைப்பொதுச் செயலாளர்கள் டி.ராஜன், ஜி.முனுசாமி, துணைத்தலைவர்கள் சுந்தரம், கே.தேவராஜ், பொருளாளர் பி.ராஜேந்திரன், அரசு ஊழியர் சங்கத்தின் வடசென்னை மாவட்ட தலைவர் வி.சிவக்குமார் உள்ளிட்டோர் பேசினர்.