காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்: மின் ஊழியர் மத்திய அமைப்பு கோரிக்கை
தஞ்சாவூர், ஜூலை 26- தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு, தஞ்சாவூர் வட்டக்கிளை 21 ஆவது திட்ட மாநாடு சனிக்கிழமை, தஞ்சாவூரில் வட்டத் தலைவர் ஏ.அதிதூத மைக்கேல்ராஜ் தலைமையில் நடைபெற்றது. வட்டச் செயலாளர் எம்.சந்தானமுத்து வரவேற்றார். ஒரத்தநாடு கோட்டச் செயலாளர் எஸ்.ரவி அஞ்சலி தீர்மானம் வாசித்தார். மண்டலச் செயலாளர் எஸ். இராஜாராமன் துவக்க உரையாற்றினார். வட்டச் செயலாளர் பி.காணிக்கைராஜ் வேலை அறிக்கையும், வட்டப் பொருளாளர் எஸ்.சங்கர் வரவு செலவு அறிக்கையும் தாக்கல் செய்தனர். தொடர்ந்து விவாதம், தீர்மானங்கள், தொகுப்புரை, புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. நிர்வாகிகள் தேர்வு தஞ்சை வட்ட கவுரவத்தலைவராக டி.கோவிந்தராஜ், தலைவராக ஏ.அதிதூத மைக்கேல்ராஜ், செயலாளராக பி.காணிக்கை ராஜ், பொருளாளராக பி.மணிவண்ணன் மற்றும் 12 பேர் துணைத் தலைவர்களாகவும், 10 பேர் துணைச் செயலாளர்களாகவும் தேர்வு செய்யப்பட்டனர். ஓய்வுபெற்ற மின் ஊழியர் அமைப்பின் மாநிலச் செயலாளர் டி. கோவிந்தராஜ், சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் செங்குட்டுவன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாநில துணைத் தலைவர் எஸ்.ஜோதி நிறைவுரையாற்றினார். கும்பகோணம் கோட்டச் செயலாளர் கே.மணிவண்ணன் நன்றி கூறினார். மின்துறையை தனியார் மயமாக்க கூடாது. பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அவுட்சோர்சிங் முறையை கைவிட்டு, காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஒப்பந்த தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.