மாரடைப்பால் மயங்கிய முதியவர்: காப்பாற்றிய ரயில்வே காவலருக்கு பாராட்டு
கோவை, ஜூலை 1- கோவை ரயில் நிலையத்தில் மார டைப்பால் மயங்கிய முதியவருக்கு முதலுதவி செய்து காப்பாற்றிய ரயில்வே போலீசாருக்கு பாராட்டு குவிந்து வருகிறது. கோவை ரயில் நிலையத்தில் ரயில்கள் வரும் போதும், புறப்படும் போதும் பயணிகளின் நடவடிக்கைகளை ரயில்வே பாதுகாப்பு படை காவல் துறையினர் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், திங்களன்று கோவை ரயில் நிலையத்தில் பிளாட்பார்ம் எண் 1 இல் ரயில்வே பாதுகாப்பு படை பிரிவின் தலைமை காவலர் சதீஷ் கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்தார். அப்பொழுது அங்கு அமர்ந்து இருந்த முதியவர் ஒருவர் மாரடைப்பால் மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். இதைப் பார்த்த சதீஷ் மற்றும் காவலர் ரினிஸ் உடனடியாக முதியவருக்கு சி.பி.ஆர் முதல் உதவி மேற்கொண்டார். இதை அடுத்து மயக்கம் அடைந்த முதியவர் நினைவு திரும்பியது. இதைத் தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் வாயிலாக முதியவர் கோவை அரசு மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். விசாரணையில் முதியவர் உதகை தொட்ட பெட்டாவை சேர்ந்த சங்கர் என்பதும், மேட்டுப்பாளையம் செல்ல பயணிகள் ரயிலுக்காக காத்து இருந்த போது மார டைப்பு ஏற்பட்டு மயங்கியதும் தெரிய வந்தது. இதை தொடர்ந்து சிகிச்சைக்கு பின் முதியவர் உடல்நலம் தேறி வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். உரிய நேரத்தில் துரிதமாக செயல்பட்டு முதியவரின் உயிரை காப்பாற்றிய சதீஷ் உள்ளிட்ட ரயில்வே பாதுகாப்பு படை காவல் துறையினருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.