tamilnadu

img

மகாராஷ்டிராவில் கோதாவரி பருலேகர் சிலை டாக்டர் அசோக் தாவ்லே திறந்து வைத்தார்

மகாராஷ்டிராவில் கோதாவரி பருலேகர் சிலை டாக்டர் அசோக் தாவ்லே திறந்து வைத்தார்

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதுபெரும் தலைவரும், சுதந்திரப் போராட்டம் மற்றும் விவசாயிகள், பழங்குடி மக்கள் நலன்களின் போராட்ட வீராங்கனையுமான கோதாவரி பருலேகரின் 118ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலை திறக்கப்பட்டது.  கோதாவரி பருலேகர், ஷம்ராவ் பருலேகருடன் இணைந்து 1945-47இல் நடைபெற்ற வொர்லி பழங்குடி மக்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டத்தில் பங்கேற்ற முக்கிய தலைவர்களில் ஒருவர் ஆவார்.  மகாராஷ்டிராவில் அகில இந்திய விவசாயிகள் சங்கம் நிறுவப்படுவதில் முக்கியப் பங்காற்றினார். அவர் ஒரு சுதந்திரப் போராட்ட வீராங்கனை மட்டுமின்றி, மாநிலத்தின் முதல் பெண் சட்ட பட்டதாரியும் ஆவார். மேலும் 25 ஆண்டுகள் சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர், 90 ஆண்டுகால புகழ்மிக்க வரலாற்றில் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் முதல் மற்றும் ஒரே பெண் தேசிய தலைவர் மற்றும் ஆதிவாசி பிரகதி மண்டலத்தின் முதல் செயலாளர்  என்ற பெருமைக்கும் உரியவர். இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தின் தலசாரியில் உள்ள கோதாவரி ஷம்ராவ் பருலேகர் கலை, அறிவியல் மற்றும் வணிகக் கல்லூரியில் கோதாவரி பருலேகரின் சிலை திறக்கப்பட்டது. சிலையை 97 வயது சிபிஎம் மூத்த தலைவர் எல்.பி.டங்கர், சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் டாக்டர் அசோக் தாவ்லே ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர். மேலும் இந்நிகழ்வின் போது பழங்குடி மக்களால் தயாரிக்கப்பட்ட பல்வேறு கலாச்சார மற்றும் கலைப் பொருட்களின் நிரந்தர கண்காட்சியும் தொடங்கப்பட்டது.  சிலையை உருவாக்கி நிறுவுவது குறித்த யோசனை, மற்றொரு மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான லஹானு கோம் அவர்களுடையது ஆகும். இந்நிகழ்வில் மும்பை முன்னாள் நிர்வாக அதிகாரி மோகன்பாய் படேல், சிபிஎம் மூத்த தலைவர் ஹேமலதா,  மத்தியக் குழு உறுப்பினர் வினோத் நிகோலே எம்எல்ஏ, தேசியவாத காங்கிரஸ் (சரத்) மூத்த தலைவர் சுனில் பூசாரா மற்றும் கட்சியின் மகாராஷ்டிரா மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள், ஊழியர்கள், பொதுமக்கள்,  நூற்றுக்கணக்கான மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வை ஆதிவாசி பிரகதி மண்டல் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.