திருவாரூர் ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கல்வி மீளாய்வுக் கூட்டம்
திருவாரூர், அக். 16- திருவாரூர் மாவட்ட ஆட்சியரக அலுவலகக் கூட்டரங்கில், பள்ளி கல்வித்துறையின் சார்பில், மாவட்ட கல்வி மீளாய்வுக் கூட்டம் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வ. மோகனச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில், “மாணவர்களின் கல்வி நலனே முக்கியம். 5 ஆம் வகுப்பு முடித்து செல்லும் அனைத்து மாணவர்கள் தமிழ் மற்றும் ஆங்கில மொழிப் பாடங்களில் எழுதுதல் வாசித்தல் மற்றும் கணித அடிப்படை செயல்பாடுகளில் சிறந்து விளங்க வேண்டும். இவற்றை பார்வை அலுவலர்கள் கண்காணித்திட வேண்டும். கற்றலில் பின்தங்கியுள்ள மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு வகுப்பாசிரியர்கள் குறைந்த பட்ச கற்றலை அடைவதற்கு பாடுபட வேண்டும். மேலும், வாசிப்பு இயக்க புத்தகங்களை பயன்படுத்திட மாணவர்களுக்கு ஆசிரியர்கள் வழிகாட்டிட வேண்டும்’’ என தெரிவித்தார். தொடர்ந்து, பள்ளி கல்வித்துறையின் சார்பில் அரசு, அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் வருமானம் ஈட்டும் தாய் அல்லது தந்தையர், விபத்தில் இறந்தாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ அம்மாணவ, மாணவியருக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ், குறித்த கால வைப்பு தொகை ரூ.75,000-க்கான பத்திரங்களை 6 மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் வழங்கினார். நிகழ்வில், முதன்மை கல்வி அலுவலர் சௌந்தர்ராஜன், மாவட்ட கல்வி அலுவலர் இராஜேஸ்வரி உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
