அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ‘தேர்வை வெல்வோம்’ புத்தகம் வழங்கல்
பெரம்பலூர், ஆக.27 - பெரம்பலூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் போட்டித் தேர்வுகளை எளிதில் எதிர்கொள்ளும் வகையில், கல்வி சார்ந்த வல்லுநர்கள் அடங்கிய குழுவினரால் உருவாக்கப்பட்டுள்ள முக்கிய வினா-விடைகள் அடங்கிய “தேர்வை வெல்வோம்” என்ற தலைப்பிலான புத்தகங்களை, போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், தனது சொந்த செலவில் தயார் செய்து வழங்கி வருகிறார். அதனடிப்படையில், குன்னம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெரியம்மாபாளையம், ஒதியம், பீல்வாடி, அசூர், எழுமூர், காருகுடி, பெருமத்தூர், நன்னை, பரவாய், வரகூர், புதுவேட்டக்குடி மற்றும் காடூர் அரசு உயர்நிலைப் பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கும், குன்னம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, குன்னம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, மருவத்தூர், பேரளி மற்றும் வேப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 10ஆம் வகுப்பு, 11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவிகளுக்கும் “தேர்வை வெல்வோம்” வினா-விடை புத்தகங்களை போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் செவ்வாய்க்கிழமை வழங்கினார். வேப்பூர் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் மொத்தம் 17 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 1,624 மாணவ-மாணவிகளுக்கு புத்தகங்களை வழங்கினார். இந்நிகழ்வில் சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.