tamilnadu

img

சிபிஎம் போராட்டத்தால் பாபநாசத்தில் 14 பேருக்கு குடிமனை பட்டா வழங்கல்

சிபிஎம் போராட்டத்தால் பாபநாசத்தில்  14 பேருக்கு குடிமனை பட்டா வழங்கல்

கும்பகோணம், செப். 22-  தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒன்றியம், அண்டக்குடி கிராமத்தின் தேசிய நெடுஞ்சாலை ஓரமாக, சுமார் 50 ஆண்டு காலத்திற்கு மேலாக, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட 14 குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வந்தனர்.  ஆனால், தற்போது கல்லணை முதல் பூம்புகார் வரை காவிரிப் பூம்பட்டினம் சாலை விரிவுபடுத்துதல் காரணத்திற்காக, மேற்கண்ட 14 குடும்பங்களின்  வீடுகளையும் இடித்துவிட்டு தார்ச் சாலை அமைக்க முயற்சித்த நெடுஞ்சாலை துறையை கண்டித்தும், பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று இடம், குடிமனை பட்டா வழங்க வேண்டும் எனவும் கடந்த ஒரு வருடமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாபநாசம் ஒன்றியக் குழு தொடர்ந்து போராடியது.   அதன் விளைவாக, பாதிக்கப்பட்ட அந்த குடும்பங்களுக்கு குடிமனை பட்டாவை பாபநாசம் வட்டாட்சியர், துணை வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர் ஆகியோர் பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வழங்கினர்.  இது, அடித்தட்டு மக்களின் குரலாய் ஒலித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  பாபநாசம் ஒன்றியக் குழுவிற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.   பட்டா வழங்கும் நிகழ்வில், சிபிஎம் பாபநாசம் ஒன்றிய மாவட்டப் பொறுப்பாளர் பி. எம்.இளங்கோவன், ஒன்றியச் செயலாளர் டி.முருகேசன், ஒன்றியக் குழு உறுப்பினர் கஸ்தூரி, முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினர் சீனிவாசன், சூலமங்கலம் கிளைச் செயலாளர் அருள், அண்டக்குடி கிளைச் செயலாளர் அன்னக்கிளி ஆகியோர் கலந்து கொண்டனர்.