பட்டா வழங்கிய 164 பேருக்கு இடத்தை ஒதுக்கீடு செய்யக் கோரி சிபிஎம் காத்திருப்பு போராட்டம்
திருச்சிராப்பள்ளி, ஜூலை 21- தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பட்டா வழங்கிய இனாம்குளத்தூர் பகுதியைச் சேர்ந்த 164 பேருக்கு ஆக 1 ஆம் தேதிக்குள் இடத்தை ஒதுக்கீடு செய்து வழங்க பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டது. திருச்சி மாவட்டம் பஞ்சப்பூரில் மே 9 ஆம் தேதி நடைபெற்ற அரசு விழாவில், திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 50,000 பேருக்கு இலவச வீட்டு மனைப் பட்டாக்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதில், இனாம்குளத்தூர் ஊராட்சியைச் சேர்ந்த 164 பேருக்கு அம்மாபட்டி கிராமத்தில் பட்டா வழங்கப்பட்டது. பட்டா வழங்கி 2 மாதங்களாகியும் நிலம் அளவீடு செய்து பயனாளிகளுக்கு வழங்கப்படவில்லை. இதுகுறித்து அரசு அலுவலர்களிடம் பலமுறை கேட்டும் நடவடிக்கை இல்லை. இந்நிலையில், பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட பட்டாவுக்குரிய இடத்தை அளவீடு செய்து ஒப்படைக்கக் கோரி ஸ்ரீரங்கம் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அறிவித்திருந்தனர். அதன்படி, ஸ்ரீரங்கம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஒன்றியக் குழு உறுப்பினர் பொன். வேலுச்சாமி தலைமையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தை விளக்கி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.ராஜா, ஒன்றியச் செயலாளர் எஸ்.ஏழுமலை, வாலிபர் சங்க ஒன்றியச் செயலாளர் மதியழகன் ஆகியோர் பேசினர். இதில், தமிழக முதல்வரால் பட்டா வழங்கப்பட்ட பயனாளிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதையடுத்து, ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் தலைமையில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய்த் துறை அலுவலர்கள், பயனாளிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரிடையே, பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், ஆக. 1 ஆம் தேதிக்குள் தமிழக முதல்வரால் பட்டா வழங்கப்பட்ட 164 பேருக்கு அம்மாபட்டியில் நிலம் அளவீடு செய்து, இடம் வழங்க முடிவு செய்யப்பட்டது. இதனால், காத்திருப்பு போராட்டம் கைவிடப்பட்டது.