tamilnadu

பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து சிபிஎம் கவுன்சிலர் தர்ணா

பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் பேரூராட்சி  நிர்வாகத்தை கண்டித்து சிபிஎம் கவுன்சிலர் தர்ணா

கரூர், ஆக. 30-  கரூர் மாவட்டம் பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் பேரூராட்சியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 10 ஆவது வார்டு கவுன்சிலர் தேவி நாகராஜன் உள்ளார். இவர் தனது வார்டு பகுதிகளில் உள்ள அடிப்படை பிரச்சனைகளை, மக்களின் கோரிக்கைகளை பேரூராட்சி நிர்வாகத்திற்கு கொண்டு சென்று நிறைவேற்றி வருகிறார்.  அதன் ஒரு பகுதியாக, 10 ஆவது வார்டில் உள்ள சின்டெக்ஸ் குடிநீர் தொட்டியை பயன்படுத்துவதில் உள்ள பிரச்சனைக்கு தீர்வு காண கோரிக்கை விடுத்தார். ஆனால், பேரூராட்சி ஊழியர்கள் ஒருதலைப்பட்சமாக நடந்து கொண்டு, அந்த கோரிக்கையை கிடப்பில் போட்டுள்ளனர். மேலும், வீட்டு வரி ரசீது கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு ரசீது  கொடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதை கண்டித்தும், அலட்சியமாக செயல்படும் பேரூராட்சி ஊழியர்களை கண்டிப்பதுடன், பேரூராட்சி நிர்வாகம் உரிய விசாரணை மேற்கொண்டு இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி,  சிபிஎம் கவுன்சிலர் தேவி நாகராஜன் பேரூராட்சி அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். போராட்டத்தை தொடர்ந்து, பேரூராட்சி தலைவர் சௌந்தரப்பிரியா, பேரூராட்சி செயல் அலுவலர் (பொ)தேவராஜ், லாலாப்பேட்டை துணை காவல் ஆய்வாளர் செந்தில்நாதன் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.   இதனைத் தொடர்ந்து, பத்து நாட்களுக்குள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தை ஒத்தி வைத்தார்.  போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிருஷ்ணராயபுரம் ஒன்றியக் குழு உறுப்பினர் வீ.நாகராஜன், கிளை உறுப்பினர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.