பட்டியலின மக்களின் வழிபாட்டு உரிமையை தடுப்பவர்கள் மீது நடவடிக்கை கோரி சிபிஎம், தீ.ஒ.முன்னணி ஆர்ப்பாட்டம்
புதுக்கோட்டை, ஆக. 19- பாக்குடி கிராமத்தில் உள்ள வரிக்கொம்புகாரர் கோவிலில், பட்டடியலின மக்களின் வழிபாட்டு உரிமையைத் தடுக்கும் சாதி வெறியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் இலுப்பூரில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் தாலுகா, பாக்குடி கிராமத்தில் சுமார் 35 ஏக்கர் அரசுப் புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த இடத்தில் வரிக்கொம்புக்காரர் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் பட்டியல் இன மக்களுக்கும் வழிபாட்டு உரிமை உள்ளது. மேற்படி இடத்தை சில சுயநலவாதிகள் ஆக்கிரமித்துள்ளனர். மேலும், வரிக்கொம்புக்காரர் கோவிலின் வழிபாட்டு உரிமையையும் மறுத்து வருகின்றனர். எனவே, மேற்படி அரசுப் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்துள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், அந்த இடத்தை நிலமில்லாத ஏழை மக்களுக்கு பிரித்து வழங்க வலியுறுத்தியும், வரிக்கொம்புக்காரர் கோவிலில் பட்டியல் இன மக்களுக்கு உள்ள வழிபாட்டு உரிமையை வழங்க வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இலுப்பூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஏ.ராஜா தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.சங்கர், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் ஆகியோர் உரையாற்றினர். கோரிக்கைகளை விளக்கி சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே.சண்முகம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் சி. அன்புமணவாளன், சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் எம்.ஆர். சுப்பையா உள்ளிட்டோர் பேசினர்.