tamilnadu

மாற்றுத்திறனாளி மீது பெட்ரோல் ஊற்றி எரித்த வழக்கு மறு விசாரணை நடத்தி குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்ய எஸ்.பி.க்கு நீதிமன்றம் உத்தரவு

மாற்றுத்திறனாளி மீது பெட்ரோல் ஊற்றி எரித்த வழக்கு மறு விசாரணை நடத்தி குற்றப் பத்திரிக்கை  தாக்கல் செய்ய எஸ்.பி.க்கு நீதிமன்றம் உத்தரவு

பெரம்பலூர், ஜூலை 1-  பெரம்பலூர் அருகே, மாற்றுத்திறனாளி மீது பெட்ரோல் ஊற்றி எரித்த வழக்கில் மறுவிசாரணை நடத்தி குற்றப் பத்திரிக்கையை தாக்கல் செய்ய எஸ்.பி.க்கு எஸ்சி, எஸ்டி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஒன்றியம், பெண்ணகோணம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி செல்வம்(35). அதே ஊரை சேர்ந்தவர் பரமசிவம் (35). இருவரும் நண்பர்கள். கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7 ஆம் தேதி பரமசிவம், செல்வத்திடம், தனது செல்போனை கொடுத்து யாரிடமாவது அடகு வைத்து பணம் பெற்று தருமாறு கூறியுள்ளார். இதையடுத்து செல்வம் செல்போனை அடகு வைத்து ஆயிரம் ரூபாயை பெற்று பரமசிவத்திடம் கொடுத்துள்ளார். இருவரும் இரவில் மது அருந்தினர். ஆக.8 அன்று அதிகாலை போதையில் இருந்த பரமசிவம், செல்வத்திடம் மீண்டும் செல்போன் மீது கூடுதலாக பணம் பெற்றுவர நிர்பந்தம் செய்து உள்ளார். இதில், இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அன்று இரவு தூங்கிக் கொண்டிருந்த செல்வத்தின் உடலில் தீப்பற்றி எரிந்ததால் சத்தமிட்டுள்ளார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர், செல்வத்தை மீட்டு, பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து மங்களமேடு காவல்துறையினர் விசாரணை நடத்திய போது, பரமசிவம் தான் பெட்ரோல் ஊற்றி எரித்தது தெரியவந்தது. இது குறித்து, கொலை முயற்சி வழக்கு பதிந்து குற்றவாளியான பரமசிவத்தை தேடிய போது, அவர் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்ற நிலையில், லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்து இருந்தனர். இந்நிலையில், பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உடலில் சுமார் 80 சதவீத தீக்காயமடைந்த செல்வம் 74 நாட்கள் தொடர் சிகிச்சை பெற்ற நிலையில், அவரை காப்பாற்ற முடியாது என்பதால், மருத்துவர்கள் அவரை வீட்டிற்கு அனுப்பிவிட்டனர். வீட்டில் பராமரிப்பில் இருந்த செல்வம் 8 மாதம் கழித்து கடந்த 2024 ஏப்ரல் மாதம் 17 ஆம் தேதி உயிரிழந்தார். வெளிநாடு சென்று தலைமறைவான பரமசிவம், இந்தியாவிற்கு வந்தபோது, மும்பை விமான நிலையத்தில் மும்பை காவல்துறையினர் பரமசிவத்தை கைது செய்து தமிழ்நாடு காவ்துறையினரிடம் ஒப்படைத்தனர். பரமசிவத்தை கைது செய்து பெரம்பலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பின்னர் பரமசிவம் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த வழக்கை கொலை முயற்சி வழக்காக தான் காவல்துறையினர் வழக்கு பதிந்துள்ளனர். ஆனால் கொலை செய்யவேண்டும் என்ற நோக்கத்தில் தான் பரமசிவம், செல்வத்தின் மீது பெட்ரோல் ஊற்றி எரித்தார். ஆகையால் இந்த வழக்கில் தீவிர விசாரணை நடத்தி கொலை வழக்காக மாற்றி குற்றவாளி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இறந்து போன செல்வத்தின் சகோதரர் முனியன் அளித்த புகாரின்பேரில் காவல்துறையினர் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் தனது சகோதரர் இறப்பு குறித்து காவல்துறையினர் முறையாக விசாரிக்காதது தொடர்பாக, பெரம்பலூரில் இயங்கி வரும் வழக்கறிஞர்களை கொண்ட ‘விக்டிம் லீகல் வாய்ஸ்’ என்ற அமைப்பிடம் முறையிட்டார். அந்த அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் சத்தியசீலன், பிரபாகரன், சக்திபாலன், சங்கர் ஆகியோர் உரிய ஆவணங்களுடன் செல்வத்தின் இறப்பு குறித்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் வகையில் காவல்துறையினர்  செயல்படாததை சுட்டிக்காட்டி பெரம்பலூர் மாவட்ட எஸ்.சி, எஸ்.டி சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி (பொ) இந்திராணி, மாற்றுத்திறனாளி செல்வத்தை தீ வைத்து எரித்த வழக்கை உரிய முறையில் மறு விசாரணை நடத்தி, குற்றப் பத்திரிக்கையை 90 நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என பெரம்பலூர் போலீஸ் எஸ்.பி ஆதர்ஸ் பசேராவிற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.