tamilnadu

img

மலக்குழி மரணங்களை தடுக்க முழுமையாக பாதாள சாக்கடைகளை அமைத்திடுக!

மலக்குழி மரணங்களை தடுக்க முழுமையாக பாதாள சாக்கடைகளை அமைத்திடுக!

தீஒமு தென்சென்னை மாநாடு கோரிக்கை

சென்னை, ஆக்.3 - சென்னை, தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் நிகழும் மலக்குழி  மரணங்களை தடுக்க அனைத்து பகுதிகளிலும் பாதாள சாக்கடை  அமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தி உள்ளது. அமைப்பின் தென்சென்னை மாவட்ட 5வது மாநாடு ஞாயிறன்று (ஆக.3) பல்லாவரத்தில் நடைபெற்றது. மாநாட்டில், மலக்குழி மற்றும் கழிவுநீர் தொட்டி மரணங்கள் அதிகளவு நடைபெறுகிறது. இதனை தடுக்க தனியார் கழிவுநீர் அகற்றுவதை தடைசெய்ய வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளே கழிவுகளை அகற்ற வேண்டும், நீர்வழிக் கரையோரம் வசிக்கும் மக்களை வெளியேற்றும் உயர்நீதிமன்ற உத்தரவை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆக்கிரமிப்பு என்ற பெயரில் அகற்றாமல், மக்களுக்கு அதே இடத்தில் கட்டணமின்றி அடுக்குமாடி குடியிருப்பு கட்டித் தர வேண்டும், ஆணவக் கொலையை தடுக்க சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும், தனியார் துறையில் இட ஒதுக்கீடு சட்டம் கொண்டுவர வேண்டும். உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டை முறையாக அமல்படுத்த வேண்டும், பள்ளிகளில் சாதிய உணர்வை தணிக்க நீதியரசர் கே.சந்துரு பரிந்துரைகளை  அமல்படுத்த வேண்டும், அண்ணா பல்கலைக்கழகத்தில் கழிவுநீர் இயந்திர பொறியியல் பிரிவை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டிற்கு மாவட்டத் தலைவர் ச.லெனின் தலைமை தாங்கினார். அம்பேத்கர் சிலைக்கு மின்னரங்க சென்னை மண்டலச் செயலாளர் ஏ.முருகானந்தம் மாலை அணிவித்தார். மின்வாரிய பொறியாளர் அமைப்பின் மாநில பொருளாளர் ஆதன் இளங்கீரன் வரவேற்றார். அஞ்சலி தீர்மானத்தை மாதர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.சரவணசெல்வி வாசித்தார். மாநாட்டை முன்னணியின் துணைப் பொதுச் செயலாளர் கே.சுவாமிநாதன் தொடங்கி வைத்தார். அமைப்பின் வேலை அறிக்கையை மாவட்டச் செயலாளர் கே மணிகண்டனும், வரவு செலவு அறிக்கையை பொருளாளர் பி.ஆர்.முரளியும் சமர்ப்பித்தனர். ஒன்றிய கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு எனும் தலைப்பில் பேராசிரியர் அருண்கண்ணன் உரையாற்றினார். முன்னணியின் மாநிலச் செயலாளர் கா.வேணி வாழ்த்தி பேசினார். மாநிலக்குழு உறுப்பினர் இ.சங்கர் நிறைவுரையாற்றினார். வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் எம்.ஆர்.சுரேஷ்குமார் நன்றி கூறினார். மாவட்டத் தலைவராக ச.லெனின், செயலாளராக கே.மணிகண்டன், பொருளாளராக ஆதன் இளங்கீரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.