முதலமைச்சர் கோப்பை மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் துவக்கம்
தஞ்சாவூர், செப். 6- தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டரங்கில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் முதலமைச்சர் கோப்பை 2025 ஆம் ஆண்டு மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகளை, மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் சனிக்கிழமை கொடியசைத்து துவக்கி வைத்து பார்வையிட்டார். பின்னர் ஆட்சியர் கூறுகையில், “மாற்றுத் திறனாளிகளுக்கு தடகளம், இறகுப் பந்து, கபடி, அடாப்டட் வாலிபால், எறிபந்து மற்றும் சக்கர நாற்காலி மேசைப் பந்து ஆகிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகிறது. இப்போட்டிகளில் வெற்றி பெறும் மாற்றுத் திறனாளிகளுக்கு முதல் பரிசாக ரூ.3,000, இரண்டாம் பரிசாக ரூ.2,000, மூன்றாம் பரிசாக ரூ.1,000 அவரவர் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும். இப்போட்டியில் 350-க்கும் மேற்பட்ட மாற்றுதிறனாளிகள் கலந்து கொண்டார்கள்’’ என்றார். மாவட்ட வருவாய் அலுவலர் தெ.தியாகராஜன், வட்டாட்சியர் சிவக்குமார், மாவட்ட விளையாட்டு (ம) இளைஞர் நலன் அலுவலர் ஜெ. டேவிட் டேனியல், அதிராம்பட்டினம் தொழிலதிபர் ஜம்ஜம் அகமது அஸ்ரப், மாவட்ட விளையாட்டுப் பயிற்றுநர்கள், மாற்றுத்திறனாளி பயிற்சி ஆசிரியர்கள், விளையாட்டு உடற்கல்வி ஆசிரியர்கள், விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.