tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

கட்டபொம்மன் நினைவு நாள் முதலமைச்சர் மரியாதை!

சென்னை: விடுதலைப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 226-ஆவது நினைவுநாளை ஒட்டி, கிண்டி காந்தி மண்டபம் வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மாலை அணிவித்து, உருவப்படத்துக்கு மலர்களை தூவி மரியாதை செலுத்தினார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் பி.கே. சேகர்பாபு, மு.பெ. சாமிநாதன், மேயர் ஆர். பிரியா உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். “சிப்பாய்ப் புரட்சிக்குப் பல ஆண்டுகள் முன்னரே விடு தலைப் போராட்ட உணர்வைப் பரவச் செய்து, உறுதி குலையாமல் போராடி உயிர் துறந்த பாஞ்சாலங்குறிச்சிப் பாளையக்காரராம் கட்டபொம்மனின் தியாகம் தமிழ் மண்ணின் தன்மான உணர்வுக்குச் சான்றாக என்றும் போற்றப்படும்!” என்று தமது சமூக வலைதளப் பக்கத்திலும் முதலமைச்சர் புகழாரம் சூட்டியுள்ளார்.

மாடு மேய்க்கும் சிறுவன் கூட  அன்புமணி போல பேசமாட்டார்’

சென்னை : விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர் களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நான் மருத்துவமனையில் இருந்தபோது அரசியல் பாகுபாடு இன்றி அனைத்து அரசியல் கட்சியினரும் நேரிலும், தொலைபேசியிலும் நலம் விசாரித்தனர். எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. ஒரு கட்சி மட்டும்தான் நலம் விசாரிக்கவில்லை. அது புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கட்சி” என்று கூறினார். மேலும், “மாடு மேய்க்கும் சிறுவன் கூட அன்புமணி  போல பேசமாட்டான். அன்புமணி தலைமையில் செயல்படுவது பாமக அல்ல அது ஒரு கும்பல். பாமக வுக்கும் அன்புமணிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அன்புமணிக்கு தலைமைப் பண்பு இல்லை என்பது உறுதியாகிவிட்டது. என் வளர்ப்பு சரியானால் 21 பேரை சேர்த்து தனியாக கட்சி ஆரம்பித்துக் கொள்ளட்டும்” என்றும் ராமதாஸ் காட்டமாக கூறினார்.

உள்ளாட்சி தனி அலுவலர்  பதவிக்காலம் மீண்டும் நீட்டிப்பு

சென்னை, அக். 16 - காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் உள்ள ஊராட்சிகளைத் தவிர்த்து 28 மாவட்டங்களில் உள்ள ஊராட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பதவிக்காலம் கடந்த 2025 ஜனவரி 5-ஆம் தேதியோடு முடிவடைந்தது. ஊராட்சிகளில் மறுசீரமைப்பு, சிற்றொகுதிகளில் எல்லை மறுவரையறை மற்றும் இடஒதுக்கீடு செயல்முறைகளுக்கு இன்னும் சிறிது கால அவகாசம் தேவைப்படும் என்பதால், தேர்தல் நடைபெறும் வரை இந்த ஊராட்சிகளின் அன்றாட விவகாரங்களை நிர்வகிப்பதற்காக தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களின் பதவிக்காலம் ஜூலை 5-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், 28 மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்ட தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை 2026 ஜனவரி 5 வரை நீட்டிப்பு செய்வதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த பதவி நீட்டிப்புக்கான சட்ட முன்வடிவை அமைச்சர் ஐ.பெரியசாமி வியாழனன்று சட்டப்பேரவையில் அறிமுகம் செய்து வைத்தார்.

ஆசிரியர் அல்லாத பணிகளுக்கு டிஎன்பிஎஸ்சி மூலம் ஆட்சேர்ப்பு 

சென்னை, அக்.16- 22 மாநில பல்கலைக்கழகங்களில் ஆசிரியர் அல்லாத பணியிடங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வா ணையம் (TNPSC) மூலமாக நிரப்பு வதற்கான சட்டத்திருத்த முன்வடிவை மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் சட்டப்பேரவையில் வியாழனன்று அறிமுகம் செய்தார். இதன் மூலம் மிகவும் திறமையான தொழில்முறை மற்றும் வெளிப்படையான ஆட்சேர்ப்பு நடைபெறும். மேலும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டால் மாநி லத்தின் கிராமப்புற மற்றும் தொலை தூரப்பகுதிகளில் உள்ள இளைஞர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். மேலும் ஆட்சேர்ப்பில் உள்ள சிக்கலான பணிகளிலிருந்து பல்கலைக்கழ கங்கள் விடுவிக்கப்படுவதன் மூலம், அவை கற்பித்தல் பணியில் முழுக் கவனம் செலுத்த வாய்ப்பாக அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.