tamilnadu

சந்திரசூட்டின் ‘காவி’ சிந்தனையும் மதச்சார்பின்மைக்கான அச்சுறுத்தலும் - அ.அன்வர் உசேன்

சந்திரசூட்டின் ‘காவி’ சிந்தனையும்  மதச்சார்பின்மைக்கான அச்சுறுத்தலும்

சந்திரசூட்டின் சங் பரிவார சிந்தனை பாபர் மசூதி பிரச்சனையில் மட்டுமல்ல. அதைவிட மோசமாக, 1991 வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்புச் சட்டம் பற்றி அவரது தீர்ப்பும் கருத்தும் மிகப் பெரிய பாதகங்களுக்கு வழி வகுக்கிறது. 
பாபர் மசூதி-ராமர் கோவில் பிரச்சனை சுதந்திர இந்தியாவில் மிகப்பெரிய பாதகத்தை உருவாக்கிய ஒன்றாகும். ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜகவின் திட்ட மிட்ட சூழ்ச்சிகள் காரணமாக சங் பரிவாரத்தினரால் 1992 டிசம்பர் 6 அன்று பாபர் மசூதி இடிப்புக்கு உள்ளானது. 2019ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் ராமர் கோவிலுக்கு சாதகமாக தீர்ப்பளித்தது. “தீர்ப்பு கிடைத்தது; நீதி கிடைக்கவில்லை” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அந்த தீர்ப்பை மதிப்பிட்டது. அந்த தீர்ப்பு வழங்கிய ஐந்து பேர் கொண்ட அமர்வில் சந்திர சூட் எனும் நீதிபதியும் ஒருவர். இவர் பின்னர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் வந்தார். பல ஆபத்தான தீர்ப்புகளையும் வழங்கினார்.  தீர்ப்பின் முரண்பாடுகள் 2019 தீர்ப்பு விநோதமானது. ஏற்கெனவே இருந்த கோவில் இடிக்கப்பட்ட இடத்தில்தான் பாபர் மசூதி கட்டப்பட்டது என்பது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப் படவில்லை என்பதை தீர்ப்பு குறிப்பிடுகிறது. தொல்லியல் ஆய்வறிக்கை, மசூதிக்கு முன்பு இருந்த கட்டிடம் இடிக்கப்பட்டதற்கான காரணம், மசூதி கட்டுவதற்காக இடிக்கப்பட்டதா, முன்பு இருந்த கட்டி டத்தின் பொருட்கள் கொண்டு மசூதி கட்டப்பட்டதா - என்ற மூன்று முக்கிய அம்சங்களை நிரூபிக்க வில்லை.  மசூதி “கசவுட்டி கற்தூண்களால்” கட்டப் பட்டுள்ளது என தொல்லியல் அறிக்கை குறிப்பிடு கிறது. ஆனால் இந்த கசவுட்டி தூண்களுக்கும் மசூதிக்கு முன்பு இருந்த கட்டிடத்துக்கும் எவ்வாறு தொடர்பு இருந்தது என்பதை தொல்லியல் அறிக்கை குறிப்பிடவில்லை. மேலும் முன்பு இருந்த கட்டிடம் இடிக்கப்பட்டது 12ம் நூற்றாண்டு, மசூதி கட்டப் பட்டது 16ம் நூற்றாண்டு. இடைப்பட்ட 400 ஆண்டு கள் குறித்து தொல்லியல் அறிக்கையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. வரலாற்று ஆய்வாளர் ருச்சிகா ஷர்மா தொல்லி யல் துறையின் முறைகேட்டை சுட்டிக்காட்டுகிறார். மசூதிக்கு அடியில் கோவில் இருந்தது என செயற்கை யான நிரூபணத்தை உருவாக்க தொல்லியல் துறை சில கற்தூண்களை அங்கு நிறுவியதாகவும், உச்ச நீதிமன்றம் அமைத்த ஆய்வுக்குழுவில் இருந்த பேரா சிரியர்கள் வர்மா மற்றும் மேனன் ஆகியோர் 14 புகார்கள் கொடுத்ததாகவும் கூறுகிறார். மேலும் தொல்லி யல் ஆய்வில் பாபர் மசூதிக்கு அடியில் இருந்த சிதில மடைந்த கட்டிடம் 13ம் நூற்றாண்டை சேர்ந்த ஒரு மசூதி என கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிடுகிறார். இந்த அம்சங்களை முன்வைக்கும் தீர்ப்பு பின்னர் வேறு சில சட்ட கோட்பாடுகளை காரணம்  காட்டி ராமர் கோவிலுக்கு சாதகமாக தீர்ப்பளித்தது. இதன் மூலம் “இடித்தவனுக்கே கட்டிடம் சொந்தம்” என கோட்பாடு முன்வைக்கப்படுகிறதா எனும் பரவ லான விமர்சனம் எழுந்தது. சந்திரசூட்டின் ஆபத்தான கருத்துகள் தற்போது “நியூஸ் லாண்டரி” இணைய இதழின் சீனி வாசன் ஜெயின் எனும் ஊடகவியலாளருக்கு அளித்த பேட்டியில் முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட்டின் கருத்துகள் அதிர்ச்சி அளிக்கின்றன. “செயல்பட்டு கொண்டிருந்த மசூதியின் மையப்பகுதியில் கடவுள் சிலைகள் வைத்ததன் மூலம் மசூதியின் புனித தன்மையை சீரழித்தது தவறானது இல்லையா” எனும் கேள்விக்கு சந்திரசூட், “அடிப்படை புனித சீரழிவு என்பது கோவிலை இடித்து மசூதியை கட்டியதுதான்” என கூறுகிறார். இந்த கருத்து அவரும் ஒரு பகுதியாக இருந்து அளித்த தீர்ப்புக்கு முரண்பட்டதாகும். உச்ச நீதி மன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த ஒருவர் தான் அளித்த தீர்ப்புக்கு முரண்பட்ட மதிப்பீட்டை முன் வைப்பது இதுதான் முதல்முறையாக இருக்கும். கோவில் இடிக்கப்பட்டுதான் மசூதி கட்டப்பட்டது என்பதற்கான ஆதாரம் இல்லை என தீர்ப்பு சொல்கி றதே என சீனிவாசன் ஜெயின் குறுக்கிடும்பொழுது, அதற்கான தொல்லியல் ஆதாரங்கள் உள்ளன என சந்திரசூட் கூறுகிறார். ஆனால் தொல்லியல் ஆதா ரங்கள் முரண்பட்டவையாக உள்ளன என்பதையும் மசூதிக்கு முன்பிருந்த கட்டிடம் இடிக்கப்பட்டதற்கும் மசூதி கட்டப்பட்டதற்கும் இடையே 400 ஆண்டுகள் உள்ளன என்பதையும் அவரும் ஒரு பகுதியாக இருந்த தீர்ப்பே சுட்டிக்காட்டுகிறது. இத்தகைய கேள்வி களுக்கு தற்போது, சந்திரசூட்டிடம் பதில் இல்லை. வரலாற்று ஆதாரங்களுக்கு மாறாக நம்பிக்கை அல்லது மதப்பற்று அடிப்படையில் அவரது கருத்து அமைந்துள்ளது. மத முரண்பாடுகளும் ஒற்றுமையும் சந்திரசூட்டின் சங் பரிவார சிந்தனை பாபர் மசூதி பிரச்சனையில் மட்டுமல்ல.அதைவிட மோசமாக, 1991 வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்புச் சட்டம் பற்றி அவரது தீர்ப்பும் கருத்தும் மிகப் பெரிய பாதகங்க ளுக்கு  வழி வகுக்கிறது.  இந்தியாவின் மத்தியகால வரலாறு சிக்கல் மிகுந்த ஒன்றாகும். பவுத்தம், சமணம், சைவம், வைணவம், இஸ்லாம், கிறித்துவம் ஆகிய மதங்கள் தம்மை  நிலைநிறுத்திக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்ட பொழுது இயற்கையிலேயே முரண்பாடுகள் தவிர்க்க இயலாததாக இருந்தன. போர்க்காலங்களில் வழி பாட்டுத்தலங்கள் தாக்குதலுக்கு உள்ளாகின. சைவமும் வைணவமும் மறுமலர்ச்சி கண்டபொழுது ஏராளமான பவுத்த, சமண கோவில்கள் சைவ அல்லது வைணவ கோவில்களாக மாறின. இஸ்லாமிய மன்னர்களின் வருகைக்கு முன்னரே இந்து கோவில்களை இந்து மன்னர்கள் போர்க் காலங்களில் அழித்ததற்கு ஏராளமான உதாரணங்கள் உள்ளன. எனினும் இந்த முரண்பாடுகளுக்கு இணை யாக மத ஒற்றுமைகளும் ஏராளமாக இருந்தன. இஸ்லாமிய இளவரசர்கள் இந்து பெண்களை மணந்துகொள்வதும் வைணவத்தில் ஆழமாக ஈடுபாடு கொண்டிருந்த கிருஷ்ண தேவராயர் தனது மகளை இஸ்லாமிய இளவரசருக்கு மணமுடித்துக் கொடுத்ததும் நடந்தது. இந்து மதத்திடமிருந்து இஸ்லாம் பல குணங்களை பெற்றுக்கொண்டது. முகமது பின் துக்ளக் தனது அரியாசனத்தில் அமர்வ தற்கு முன்பு ‘புனித’ கங்கை நீரை தெளித்தார். இதே  போல இந்து மதமும் இஸ்லாத்திடமிருந்து பல குணங்க ளை பெற்றுக்கொண்டது. இதற்கு மிகச்சிறந்த உதார ணம் கட்டிடக்கலை. இந்து-இஸ்லாம் மதங்களின் ஒருங்கிணைப்பாக விளங்கிய மிகச்சிறந்த உதார ணம்தான் கபீர்தாசர். 1991 வழிபாட்டு தலங்கள்  பாதுகாப்பு சட்டத்தின் சிதைவு எனவேதான் வழிபாட்டுத்தலங்களின் தன்மை இன்றைய சமூகத்தில் பிளவுக்கு வழிவகுக்க கூடாது என்பதற்காக பாபர் மசூதி இடிப்புக்கு பின்னர் “1991 வழிபாட்டு தலங்கள் பாதுகாப்பு” சட்டம் கொண்டு வரப் பட்டது. பாஜக தவிர அனைத்து கட்சிகளும் இந்த சட்டத்தை ஆதரித்தன. இந்த சட்டம் ஒரு வழிபாட்டு தலத்தின் தன்மை 1947 ஆகஸ்டு 15 அன்று என்ன வாக இருந்ததோ அதே தன்மை நீடிக்க வேண்டும் என குறிப்பிடுகிறது. அதன் முன்வரலாறு எதுவாக இருந்தாலும் தற்போதைய தன்மை மாறக்கூடாது. ஒரே விதிவிலக்கு பாபர் மசூதி-ராமர் கோவிலுக்கு மட்டும், ஏனெனில் அன்று அது வழக்கில் இருந்தது. ஆனால், இச்சட்டத்திற்கு மாறாக, சம்பல் மசூதிக்கு அடித்தளத்தில் கோவில் இருந்தது எனவும் அதனை ஆராய வேண்டும் எனவும் சங் பரிவாரத்தினர் வழக்கு தொடர்ந்தபொழுது அதற்கு அனுமதி அளித்து 1991 சட்டத்தை சிதைத்த ‘பெருமை’ சந்திரசூட்டுக்குதான் உண்டு. “ஒரு வழிபாட்டு தலத்தின் மதத்தன்மை குறித்து முடிவார்ந்த ஒரு கோட்பாடை 1991 சட்டம் முன்வைக்கவில்லை” என விநோதமான - பாதக மான விளக்கத்தை முன்வைக்கிறார் சந்திரசூட். இவரது இந்த தீர்ப்பின் காரணமாகவே சம்பல் மசூதி பிரச்சனையில் வன்முறைகள் வெடித்து துப்பாக்கி சூடு நடந்து பலர் உயிரிழந்தனர். மதச்சார்பின்மைக்கான ஆபத்து இந்த தீர்ப்புதான் சங் பரிவாரத்தினருக்கு உற்சாகம் அளித்துள்ளது. காசி ஞானவாபி மசூதி, மதுரா ஈத்கா மசூதி போன்றவை தம்மிடம் தரப்பட வேண்டும் என கொக்கரித்து வரும் சங் பரிவாரத்தினருக்கு சந்திர சூட் தீர்ப்பு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. இந்தியா வில் உள்ள எந்த ஒரு மசூதி அல்லது தர்கா அல்லது தேவாலயம் குறித்தும் சட்டப்பிரச்சனை எழுப்ப இந்த தீர்ப்பு வழிவகுக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநாட்டுத் தீர்மானம் குறிப்பிடுகிறது: “இதனை நீதித்துறையின் உயர்ந்த இடத்தில் உள்ளவர்களின் மோசமான சட்ட விரோத செயல்கள் மூலம் சாத்தி யமாக்கின. அன்றைய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் இத்தகைய ஆய்வுகள் 1991 சட்டத்தை மீறவில்லை என கூறினார்.” விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு தன் இல்லத்துக்கு பிரதமர் மோடியை வரவழைத்ததன் மூலம் தனது சங் பரிவார சிந்தனைக்கு மேலும் ஒரு நிரூபணத்தை சந்திரசூட் வெளிப்படுத்தினார். இத்தகைய ஒருவர் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்தது மதச்சார்பின்மைக்கு எவ்வளவு ஆபத்தானது என்பதை இன்று தேசம் பார்த்துக்கொண்டுள்ளது.  ஒரு முதலாளித்துவ சமூகத்தில் நீதித்துறை என்பது அடிப்படையில் உழைக்கும் மக்களுக்கும் ஒடுக்கப் பட்டவர்களுக்கும் எதிரானதாகவே இருக்கும் என்பதும் ஆள்வோரின் கருத்தியலுக்கு ஆதரவாகவே இருக்கும் என்பதும் விதி. சில நல்ல தீர்ப்புகள் என்பவை விதிவிலக்கு. சந்திரசூட்டின் கருத்துகள் இதனை மேலும் ஒருமுறை நிரூபிக்கின்றன.