குரூப்-4 தேர்வை ரத்து செய்யக் கோரி போட்டி தேர்வர்கள் ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர், ஆக 3– கடந்த ஜூலை 12 இல் நடைபெற்ற, குரூப்–4 தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி தஞ்சாவூரில், போட்டி தேர்வாளர்கள் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சாவூரில், ‘வெற்றி’ போட்டி தேர்வாளர்களின் நலச்சங்கத்தின் தலைவர் சிவக்குமார் தலைமையில், போட்டித் தேர்வாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில், கடந்த 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற குரூப் – 2 தேர்வில், முறைகேடு நடந்ததாக இளைஞர்கள் போராடியபோது, அப்போதைய எதிர்க்கட்சி தலைவர் மு.கருணாநிதி கோரிக்கையை ஏற்று, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அந்த தேர்வினை ரத்து செய்தார். அதேபோல், கடந்த, ஜூலை 12 ஆம் தேதி, நடைபெற்ற குரூப் – 4 தேர்வில், பாடத்திட்டத்துக்கு வெளியில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டதால், மாணவர்கள் பலர் எழுத முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இத்தேர்வை உடனே ரத்து செய்து விட்டு, மீண்டும் தேர்வு நடத்த வேண்டும். குரூப் – 4 மறுதேர்வு பழைய பாடத்திட்டத்தின்படி நடத்திட உடனே அறிவிப்பு வெளியிட வேண்டும். குரூப் – 2, குரூப் – 2 ஏ முதன்மைத் தேர்வு ரத்து செய்யப்பட்டு, 2018 ஆம் ஆண்டு இருந்ததைப் போல் 100 கேள்விகள் பொதுத் தமிழ், 100 கேள்விகள் பொது அறிவு என ஒரே தேர்வாக நடத்தப்பட வேண்டும். தமிழகத்தில் வேலைக்காக பல லட்சம் இளைஞர்கள் காத்திருக்கும் நிலையில், அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தியதை ரத்து செய்து, மீண்டும் 58 ஆக குறைத்து, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை வழங்கிட வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.