அக்.3 முதல் 12 வரை புதுக்கோட்டையில் புத்தகத் திருவிழா
புதுக்கோட்டை, செப். 24- புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து நடத்தும் 8 ஆவது புத்தகத் திருவிழா, அக். 3 அன்று தொடங்கி, 12 ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. அக். 3 அன்று காலை நடைபெறும் தொடக்க விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் மு. அருணா தலைமை வகிக்கிறார். மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ். ரகுபதி, மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோர் புத்தகத் திருவிழாவை தொடங்கி வைத்து உரையாற்றுகின்றனர். மாலை நடைபெறும் நிகழ்ச்சியில், வானொலி நிலைய முன்னாள் இயக்குநர் சுந்தர ஆவுடையப்பன், ஊடகவியலாளர் ஜி. கார்த்திகேயன் ஆகியோர் பேசுகின்றனர். அக்.4 அன்று மாலை, தமிழால் வாழ்ந்தோம், தமிழராய் உயர்ந்தோம் என்ற தலைப்பில் சென்னை நூலக ஆணைக்குழுத் தலைவர் கவிஞர் மனுஷ்யபுத்திரன் பேசுகிறார். அக்.5 அன்று, தெளிவின் திரள்-திருக்குறள் என்ற தலைப்பில், தமிழ்நாடு உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத் தலைவர் ஆர். பாலகிருஷ்ணன் பேசுகிறார். அக்.6 ஆம் தேதி, ஆரியப்பட்டாவின் அதிசயக் கண்டுபிடிப்புகள் என்ற தலைப்பில் விஞ்ஞானி த.வி. வெங்கடேஸ்வரன் பேசுகிறார். அக்.7 ஆம் தேதி, கவிஞர் தங்கம் மூர்த்தியின் தலைமையில் சுழலும் கவியரங்கம் நடைபெறுகிறது. பகலில் சூழல் காப்போம் என்ற தலைப்பில் பறவைகள் ஆராய்ச்சியாளர் கிருபா நந்தினி பேசுகிறார். அக்.8 ஆம் தேதி, வாயும் வயிறும் என்ற தலைப்பில் எழுத்தாளர் மதுக்கூர் ராமலிங்கம், அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் புத்தகங்கள் என்ற தலைப்பில் பாடலாசிரியர் கவிஞர் சினேகன் ஆகியோர் பேசுகின்றனர். அக்.9 ஆம் தேதி, நல்ல வண்ணம் வாழலாம் என்ற தலைப்பில் சொற்பொழிவாளர் ரெ. சண்முகவடிவேலு பேசுகிறார். அக்.10 ஆம் தேதி, மண்ணின் கதைகள் என்ற தலைப்பில் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக நாட்டுப்புறவியல் துறைத் தலைவர் இரா.காமராசு பேசுகிறார். அக்.11 ஆம் தேதி, ஈத்துவக்கும் இன்பம் என்ற தலைப்பில் முன்னாள் தலைமைச் செயலர் வெ. இறையன்பு பேசுகிறார். அக்.12 ஆம் தேதி நடைபெறும் நிறைவு நிகழ்ச்சியில், எழுத்தாளர் நா. முத்துநிலவன் தலைமையில் பட்டிமன்றம் நடைபெறுகிறது. பகலில் சதுரங்கப் போட்டிகள் நடைபெறுகின்றன. சுமார் நூறு அரங்குகள் அமைக்கப்படுகின்றன. மாநிலத்தின் முக்கிய பதிப்பகங்கள் பங்கேற்கின்றன. தினமும் மாலை சொற்பொழிவுக்கு முன்னதாக, பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.