உடல் தானமும் உறுப்பு தானமும்
தோழர் சீத்தாராம் யெச்சூரியின் முதலாமாண்டு நினைவுநாளில் தோழர்களும், பொதுமக்களும் “உடல்தான உறுதிமொழி” எடுத்துகொள்ள வேண்டுமென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் அவர்கள் விடுத்துள்ள அறைகூவலை, ‘மக்கள் நல்வாழ்விற்கான மருத்துவர் அரங்கம்’ வரவேற்கிறது. மக்கள் சேவையையே முதன்மையாகக் கொண்ட தோழர் சீத்தாராம் யெச்சூரியின் வாழ்வும் மறைவும் நமக்கு பல பாடங்களைக் கற்றுத் தருகின்றன. கம்யூனிஸ்டுகள் “வாழும்போது உடல் வருத்தி மக்கள் பணி செய்வார்கள், மறைந்தபோதும் தன் உடல் மக்களுக்குப் பயன்பட வேண்டும் என்பதற்காக
உடல்தானம்
செய்வார்கள்” என்பதைத் தன் வாழ்க்கையின் மூலமாகச் சொல்லிச் சென்றிருக்கிறார் தோழர் யெச்சூரி. உடல்தானம் உடல் தானத்தில் பெறப்படும் உடல், மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு உடற்கூறுகள் குறித்துப் படிப்பதற்கும், பயிற்சி பெறுவதற்கும் பயன்படுகிறது. குறிப்பிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் உடல்களைப் பரிசோதனை செய்து, அந்த நோய்களால் உறுப்புகளில் ஏற்படும் பாதிப்புகளைக் கண்டறிந்து சிகிச்சை முறைகளை உருவாக்க முடிகிறது. திசுக்கள் அல்லது செல்களில் ஏற்படும் மாற்றங்களைக் கண்டறிந்து, சிகிச்சை மற்றும் மருந்துகள் பற்றிய ஆய்வுகள் நடத்த முடியும். மக்களுக்குப் பயன்படும் மருத்துவ ஆராய்ச்சிக்காகவும், மருத்துவ முன்னேற்றத்திற்காகவும், பயன்தரும் வகையில் இறந்தபின் தன் உடலைத் தானம் செய்வதாக யார் வேண்டுமானாலும் ‘உறுதிமொழி’ தரலாம். இதனை எழுத்துப்பூர்வமாக அளிப்பதற்கு அதற்குரிய படிவங்களை மருத்துவக் கல்லூரிகளில் உடற்கூறியல் (ANATOMY) துறையில் பெற்றுக்கொள்ளலாம். அதில் தன் சுய நினைவுடன், எந்தவித வற்புறுத்தலுமின்றி, தன் சொந்த விருப்பத்துடன் ‘உடல் தானம்’ செய்வதாக உறுதிமொழி அளிக்க வேண்டும். இதனைக் குடும்பத்தினரின் அல்லது உறவினரின் சம்மதத்துடன்தான் செய்ய வேண்டுமென்ற அவசியமில்லை, ஆனால் தன் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்களிடம் இதுகுறித்துத் தகவல் தெரிவிப்பது, தன் இறப்பிற்குப்பின் முறையாக ‘உடல்தானம்’ செய்வதற்கு உதவியாக இருக்கும். ஏனெனில் இறந்து 6 முதல் 8 மணி நேரத்திற்குள் உடல்தானம் செய்பவரின் உடலை மருத்துவக் கல்லூரி உடற்கூறியல் துறையில் ஒப்படைக்க வேண்டும். குளிர்சாதனப் பெட்டியில் முறையாகப் பாதுகாக்கப்பட்டால் இரண்டு அல்லது மூன்று நாட்கள் கடந்தும் உடலைத் தானம் அளிக்கலாம்.
உடல்தானமும் உடல் உறுப்புதானமும்
உடல்தானம் - உடல் உறுப்புகள் தானத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது. “மூளைச்சாவு” அடைந்தவரின் உறுப்புகள் (இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகங்கள் முதலியன) மட்டுமே தானமாகப் பெற்று - அறுவைசிகிச்சை மூலமாக எடுக்கப்பட்டு, பொருந்தக்கூடிய மற்றும் தயார் நிலையிலிருக்கும் பிற நோயாளிகளுக்கு உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை செய்து பொருத்தப்படும். “மூளைச்சாவு” நிலையிலிருக்கும் ஒருவருக்குச் செயற்கைச் சுவாசம் மூலமாக, இதயம் மற்றும் நுரையீரல் சீரான இரத்த ஓட்டத்தால் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருப்பதால், திசுக்களுக்குச் செல்லும் ஆக்ஸிஜன் அளவு குறையாமல் இருக்கும். இதனால் பயன்படுத்தப்படும் உறுப்புகளின் திசுக்கள் சேதமடையாமலிருக்கும். இவ்வாறாக மூளைச்சாவு அடைந்து உறுப்புதானம் செய்தவரின் உடலைத் தானமாக அளிக்க முடியாது. உறுப்புதானத்தை ஊக்குவிக்க, “உறுப்புதானம் செய்தவருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்குகள் நடைபெறும்” என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசு அறிவித்திருப்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.
கண்தானம்
உறுப்புதானங்களில் “கண்தானம்” இறந்தபின் மட்டுமே செய்ய முடியும். இறந்தவரின் உடலிலிருந்து 4 முதல் 8 மணி நேரத்திற்குள் கண்கள் எடுக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டால் மட்டுமே பிறருக்குப் பொருத்த முடியும் (‘கார்னியா’ என்கிற கருவிழி மட்டுமே பயன்படுத்தப்படும்). கண்தானத்திற்குத் தனியாக உறுதிமொழிப் படிவம் செய்து கொடுப்பதும், கண்தானம் குறித்துக் குடும்ப உறுப்பினரிடம் தெரியப்படுத்துவதும் அவசியமாகும். ஆனால் கண்தானம் செய்தவரும் உடல்தானம் செய்யலாம். உடல் உறுப்புதானம் செய்வோர் இறந்தபின்பும் பிறரின் உயிரைக் காப்பாற்றி அதன் மூலம் தொடர்ந்து வாழ்கிறார்கள். கம்யூனிஸ்டுகள், மண்ணுக்குப் போகிற தன் உடலை மருத்துவ அறிவியல் வளர்ச்சிக்காகக் கொடுத்து மக்கள் மனதில் வாழ்கிறார்கள். தோழர் யெச்சூரியும் நீண்டகாலம் நம் நினைவில் வாழ்வார்.
