பிசானத்தூரில் உயிரி மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை அமைக்கக் கூடாது! இடதுசாரிக் கட்சிகள் வலியுறுத்தல்
புதுக்கோட்டை, அக். 13- சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் உயிரி மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலையை, கந்தர்வகோட்டை அருகே, பிசானத்தூரில் அமைப்பதற்கு இடதுசாரிக் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் இடதுசாரிக் கட்சிகளின் நிர்வாகிகள் கூட்டம், சிபிஎம் கந்தர்வகோட்டை வடக்கு ஒன்றியச் செயலாளர் ஜி. பன்னீர்செல்வம் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் எம். சின்னதுரை எம்எல்ஏ, சிபிஐ(எம்எல்) மாவட்டச் செயலாளர் வி.மு. வளத்தான், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.ராமையன், த. அன்பழகன், சிபிஐ ஒன்றியச் செயலாளர் உ. அரசப்பன், ஒன்றிய கவுன்சிலர் கலியபெருமாள், சிபிஐ(எம்எல்) ஒன்றியச் செயலாளர் கே.ஜோதிவேல், சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் வி. ரெத்தினவேல், ஒன்றியச் செயலாளர் எஸ்.நாராயணசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அக்.25 இல் ஆர்ப்பாட்டம் கந்தர்வகோட்டை அருகே, பிசானத்தூரில் அமைய உள்ள உயிரி மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலையால் நிலத்தடி நீருக்கும், சுற்றுச் சூழலுக்கும் மிகுந்த பாதிப்பு ஏற்படும். அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு நோய்த்தொற்று வரும் ஆபத்து உள்ளது. கதிர்வீச்சு அபாயமும் உள்ளது. எனவே, மேற்படி சுத்திகரிப்பு ஆலையை பிசானத்தூரில் அமைக்கக் கூடாது என்றும், ஆலை அமைப்பதற்கு சுற்றுச்சூழல் அனுமதி அளிக்கக் கூடாது என வலியுறுத்தியும் அக்.25 அன்று கந்தர்வகோட்டையில் இடதுசாரிக் கட்சிகளின் சார்பில், ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.