மலையடிக்குப்பத்தில் முந்திரி மரங்களை அழிக்க முயற்சி சிபிஎம், விவசாயிகள் சங்கம் தடுத்து நிறுத்தி மறியல்
கடலூர், ஜூலை 18 - கடலூர் அருகே மலையடிக்குப்பம் கிராமத்தில் மீண்டும் ஜேசிபி எந்திரத்தின் மூலம் முந்திரி மரங்களை அழிக்கும் முயற்சியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விவசாயிகள் சங்கம் தடுத்து நிறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டது. கடலூர் அருகே மலையடிக்குப்பம் கிரா மத்தில் 164 ஏக்கர் அரசு நிலத்தில் ஐந்து தலை முறையாக 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் விவசாயம் செய்து வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் தங்களுக்கு பட்டா வழங்கக் கோரி பல ஆண்டுகளாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் தமிழ்நாடு அரசிற்கும் மனு அளித்தனர். ஆனால், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல் தொழிற்சாலைக்காக ஏராளமான போலீசாரை வைத்துக் கொண்டு, விவசாயம் செய்து வந்த 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முந்திரி மரங்களை ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு அகற்றினர். இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப் பட்டு, முந்திரி மரங்களை அகற்ற இடைக் கால தடை விதித்து, விசாரணையில்உள்ளது. இந்நிலையில், ஜூலை 15 ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் சிதம்பரத்தில் நடந்த நிகழ்ச்சியில் மலையடிக்குப்பம் கிராமத்தில் ரூ.75 கோடி மதிப்பீட்டில் தோல் அல்லாத காலணி தொழிற்சாலை அமைக்கப்படும் என அறிவித்தார்.
காத்திருப்புப் போராட்டம்
காலணி தொழிற்சாலை எங்களுக்கு வேண்டாம்; உடனடியாக கிராம மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த மூன்று நாட்களாக மலையடிக் குப்பம் கிராமத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கமும், கிராம மக்களும் இணைந்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர். ஏற்கனவே, 100 ஏக்கர் பரப்பளவில் முந்திரி மரங்களை மாவட்ட நிர்வாகம் அழித்த நிலையில், மீதமுள்ள 50 ஏக்கர் விவசாய நிலத்தில் உள்ள மரங்களை அழிக்க 10-க்கும் மேற்பட்ட ஜேசிபி இயந்திரங்களுடன் 200-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் உத வியுடன் வருவாய்த் துறையினர் வியாழக் கிழமை காலை வந்தனர். அவர்களை தடுத்து நிறுத்தியும், ஜேசிபி எந்திரங்களை உள்ளே விடாமலும் விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் டி.ரவீந்திரன் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தின் போது வருவாய் கோட்டாட்சியர் அபிநயா, வட்டாட்சியர் மகேஷ் உள்ளிட்ட வருவாய் துறையினர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த கடும் முயற்சி மேற்கொண்டனர். நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணை முடிந்த பிறகு நீதிமன்ற உத்தரவுக்கு கட்டுப்படுகிறோம் என்று மக்கள் பலமுறை வலியுறுத்திக் கூறினர். ஆனால், போராடும் மக்கள் சொல்வதை காது கொடுத்து கேட்காமல், “எங்களைத் தடுக்காதீர்கள், நாங்கள் முந்திரி மரங்களை அகற்ற வேண்டும்” என்று பிடிவாதமாக கோட்டாட்சியர் தெரிவித்தார்.
நீதிமன்றத்தை அவமதிக்கும் அதிகாரி
நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தாலும் பர வாயில்லை என்றும், அதை நாங்கள் சந்திக்க தயார் என்றும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்தாலும் கவலையில்லை என்றும் ஆக்ரோஷமாக கோட்டாட்சியர் அபிநயா தெரிவித்தார். இதனால் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. “எங்கள் மீது பொக்லைன் இயந்திரங் களை ஏற்றிவிட்டு முந்திரி மரங்களை அப்புறப்படுத்தச் செல்லுங்கள்’ என்று கூறிய நிலையில், வியாழக்கிழமை மதியம் 2:30 மணி வரை நீதிமன்ற உத்தரவுக்கு கால அவகாசம் கொடுத்தனர். இதனையடுத்து அமைதியான முறையில் காத்திருப்புப் போராட்டத்தை தொடர்ந்தனர். போராட்டப் பந்தலிலேயே சமைத்தும் சாப்பிட்டனர். இந்தப் போராட்டத்தில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, விவசாயி கள் சங்க மாவட்டத் தலைவர் ஜி.ஆர். ரவிச்சந்திரன், மாவட்டச் செயலாளர் ஆர்.கே.சர வணன், மாவட்டப் பொருளாளர் ஆர்.ராமச் சந்திரன், போராட்டக்குழு ஒருங்கிணைப்பா ளர்கள் ஜெ.ராஜேஷ் கண்ணன், எஸ்.தட்சி ணாமூர்த்தி, லோகநாதன், செல்வகுமார், விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.பிரகாஷ், மாநிலக் குழு உறுப்பினர் பழ.வாஞ்சிநாதன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.கருப்பையன், வி.சுப்புராயன், ஆர்.அமர்நாத், மாவட்டக் குழு உறுப்பினர்கள் பஞ்சாட்சரம், ராஜா, ஸ்டீபன் ராஜ், ஜெயபாண்டியன், முத்துக்குமரன், கே.பி.சௌமியா மற்றும் கிராம மக்கள் திரளாக பங்கெடுத்தனர். கோரிக்கைகள் வெல்லும் வரை காத்திருப்புப் போராட்டம் தொடரும் என்று போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர்.
விவசாயிகளை அப்புறப்படுத்த நீதிமன்றம் இடைக்கால தடை
சென்னை உயர் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை (ஜூலை 18) அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என வழக்கறிஞர் திருமூர்த்தி முறையீடு செய்தார். நீதிபதிகள் சுந்தர் மற்றும் சுரேந்தர் அமர்வு, அவசர வழக்காக மதியம் விசாரிப்பதாக அறிவித்தனர். அதன்படி, இந்த வழக்கு பிற்பகல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது, அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, “அரசின் பொது திட்டத்திற்கு இந்த நிலங்கள் கையகப்படுத்தப் படுவதாகவும், இந்த பகுதியில் உள்ள விவசாயிகள் அனைவரும் வசதி உள்ள விவசாயிகள்தான்” என்றும் அவர் தெரிவித்தார். இதற்கு மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆர்.திருமூர்த்தி, “இது தொடர்பாக விவசாயிகள் சார்பில் பேரிடர் மேலாண்மை முதன்மைச் செயலாளரிடம் மறு ஆய்வு கோரி கோரிக்கை மனு கொடுக்கப்பட்டுள்ளது. அதில் தடை விதிக்குமாறு கேட்டுள்ளோம்” என்றும் வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “பேரிடர் மேலாண்மை துறை முதன்மைச் செயலாளர் முடிவெடுக்கும் வரை விவ சாயிகளை அந்தப் பகுதியில் இருந்து வெளி யேற்றக் கூடாது” என இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டனர். மேலும், விவசாயிகளுக்கு எதிராக முடிவு எடுக்கப்பட்டால், அதற்கு மேல்முறையீடு செய்வதற்கு பத்து நாட்கள் கால அவகாசம் வழங்கியும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். முடிவுக்கு வந்த காத்திருப்பு போராட்டம் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, மலையடிக் குப்பத்தில் நடைபெற்று வந்த காத்திருப்பு போராட்டம் முடிவு பெற்றது. தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் டி.ரவீந்தி ரன் போராட்டத்தை நிறைவு செய்து பேசினார். நீதிமன்றம் உத்தரவு மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிய வந்ததை அடுத்து, போராட்டக் களத்தில் குவிக்கப்பட்டிருந்த 10-க்கும் மேற்பட்ட ஜேசிபி இயந்திரங்கள், 200-க்கும் மேற்பட்ட காவல் துறையினரை திரும்பப் பெற்றது.