மணமேல்குடியில் குறுவள மைய அளவில் கலைத் திருவிழா போட்டிகள்
அறந்தாங்கி, ஆக. 26- புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மத. சண்முகம் வழிகாட்டுதலின்படி, கலைத்திருவிழா போட்டிகள் மணமேல்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மணமேல்குடி, அரசு மேல்நிலைப்பள்ளி கட்டுமாவடி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அம்மாபட்டினம், அரசு மேல்நிலைப்பள்ளி கோட்டைப்பட்டினம், அரசு மேல்நிலைப்பள்ளி பெருமருதூர் மற்றும் அம்பல வாணநேந்தல் ஆகிய 6 குறு வள மையங்களின் தலைமை ஆசிரியர்கள், அந்தந்த குறு வள மையங்களில் தொடங்கி வைத்தனர். இந்நிகழ்வில், அந்தந்த குறு வள மையங்களுக்கு உட்பட்ட தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் இக்கலைத் திருவிழாவில் கலந்து கொண்டனர். குறுவள மையங்களில் முதலிடம் பிடித்த மாணவர்கள் வட்டார அளவில் நடைபெறும் கலைத் திருவிழாவில் கலந்து கொள்வார்கள். குறுவள மைய அளவிலான கலைத் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை வட்டார கல்வி அலுவலர்கள் செழியன், அமுதா மற்றும் வட்டார வளமைய மேற்பார்வையாளர், பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
