கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரியில் கலைத்திருவிழா போட்டிகள்
கும்பகோணம், செப். 25- 2025 தமிழ்நாடு அரசு உயர் கல்வித்துறையும், கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரியும் இணைந்து நடத்தும் கல்லூரிக் கலைத்திருவிழா 2025 போட்டிகளுக்கான தொடக்க விழா, கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரி அண்ணா கலையரங்கில் நடைபெற்றது. இவ்விழாவை கல்லூரி முதல்வர் மா. கோவிந்தராசு துவக்கி வைத்துப் பேசும்போது, கல்லூரிக் கலைத் திருவிழாவை தமிழ்நாடு அரசு முன்னெடுப்பதற்கான நோக்கம் தமிழ்ப் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் இளம் தலைமுறையினருக்குக் கொண்டு சேர்ப்பதோடு, அவர்கள் புதிய திறன்களை வளர்த்துக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றார். மேலும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள 32 வகையான கலைப் போட்டிகளிலும் மாணவ-மாணவியர் அனைவரும் பங்கேற்று, தமது படைப்பாற்றலையும் தொலைநோக்குச் சிந்தனையையும் வளர்த்துக் கொள்ளும் வகையில் தம்மைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார். கல்லூரிக் கலைத் திருவிழா முதன்மை அமைப்பாளர் சு. முத்துநடேசன் வரவேற்புரை ஆற்றினார். வேதியியல் துறைத் தலைவர் மா. மீனாட்சிசுந்தரம் தலைமை உரை ஆற்றினார். கணினி அறிவியல் துறைத் தலைவர் சே.சங்கரநாராயணன் முன்னிலை வகித்தார். கல்லூரி தேர்வு நெறியாளர் வெ.பாஸ்கர் வாழ்த்துரை வழங்கினார். கல்லூரிக் கலைத் திருவிழா ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் சூ. பாஸ்கரசஞ்சீவி நன்றியுரையாற்றினார்.