சாதி மறுப்பு திருமணத்தால் பிரிக்கப்பட்ட தம்பதியினர் தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டனம்
கரூர், செப். 13- கரூர் மாவட்டத்தில் சாதிய வெறுப்பால் ஒரு இளம் தாயை அவரது 20 நாள் குழந்தையிடமிருந்து பிரித்த கொடூரமான சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தாந்தோணிமலையைச் சேர்ந்த சண்முகப்பிரியன் என்ற 27 வயது இளைஞர் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர். ஈரோடு கவுந்தம்பாடியைச் சேர்ந்த ஹரிணி என்ற பெண் அவரை காதலித்தார். ஹரிணி பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். ஆரம்பத்தில் ஹரிணியின் பெற்றோர் குமாரவடிவேல், அம்பிகா ஆகியோர் சண்முகப்பிரியனை வீட்டுக்கு அழைத்து வந்து குடும்பத்துடன் பழக அனுமதித்தனர். மகளுக்கு திருமணம் செய்து வைக்க விருப்பம் தெரிவித்தனர். ஆனால் சண்முகப்பிரியன் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர் என்று தெரிந்த பின்னர் அவர்கள் திருமணத்தை கடுமையாக எதிர்த்தனர். இதையடுத்து இருவரும் கரூரில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் அவர்கள் தாந்தோணிமலை காவல் நிலையத்தில் பாதுகாப்பு கோரி மனு அளித்தனர். காவல்துறையினர் விசாரணை நடத்தியபோது, ஹரிணியின் பெற்றோர் “எங்களுக்கு மகள் வேண்டாம்” என்று எழுதி கொடுத்துவிட்டு சென்றனர். சண்முகப்பிரியனின் பெற்றோர் ஹரிணியை ஏற்றுக்கொண்டனர். ஆகஸ்ட் 13, 2025-ல் கரூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஹரிணிக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்த மகிழ்ச்சியான செய்தியை ஹரிணி தனது பெற்றோருக்கு தெரிவித்தார். ஆனால் அவர்கள் “பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த குழந்தையை அங்கேயே விட்டுவிட்டு வந்துவிடு” என்று கொடூரமாக கூறினார்கள். மேலும் ஹரிணிக்கு அவர்கள் சாதியில் ஒருவரை திருமணம் செய்து வைப்பதாகவும் கூறினார்கள். செப்டம்பர் 4, 2025-ல் ஹரிணி தனது பெற்றோரை கரூருக்கு வரவழைத்தார். அவர்கள் மீண்டும் “பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவனுக்கு பிறந்த குழந்தை வேண்டாம்” என்று கூறினார்கள். பெற்றோரின் தொடர் நிர்ப்பந்தத்தால் மனம் மாறிய ஹரிணி, கரூர் மாவட்ட சமூக நலத்துறை மற்றும் தாந்தோணிமலை காவல் துறையின் கவுன்சிலிங்கின் பின்னரும் தனது 20 நாள் பச்சிளம் குழந்தையை சண்முகப்பிரியனிடம் விட்டுவிட்டு பெற்றோருடன் சென்றுவிட்டார். தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் கரூர் மாவட்டச் செயலாளர் இரா.முத்துச்செல்வன், மாவட்டத் தலைவர் கெ.சக்திவேல் ஆகியோர் இந்த சம்பவத்தை கடுமையாக கண்டித்துள்ளனர். அவர்கள் காவல்துறை மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் தீண்டாமை கொடுமைக்கு துணை போனதாக குற்றம் சாட்டியுள்ளனர். ஹரிணியின் பெற்றோர் மீது தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கோரியுள்ளனர். மேலும் ஹரிணியை மீண்டும் கணவர் மற்றும் குழந்தையுடன் சேர்ந்து வாழ வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
