tamilnadu

தனக்கு அடையாளம் கிடைக்கும் என்பதற்காக  அன்புமணி திமுகவை விமர்சனம் செய்கிறார் திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

தனக்கு அடையாளம் கிடைக்கும் என்பதற்காக  அன்புமணி திமுகவை விமர்சனம் செய்கிறார்

திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

திருச்சிராப்பள்ளி, ஆக. 10-  திருச்சி பஞ்சப்பூர் கலைஞர் கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையத்திலிருந்து, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் (லிட் )திருச்சி மண்டலத்தின் சார்பில், திருச்சி மாநகரின் பல்வேறு வழித்தடங்களில் 7 புதிய தாழ்தள சொகுசுப் பேருந்துகள், 3 புறநகர் பேருந்துகள் மற்றும் 1  நகரப் பேருந்து உட்பட மொத்தம் 11 புதிய பேருந்துகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ஞாயிறு அன்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர்  கே.என்.நேரு, கொடியசைத்து தொடங்கி வைத்தார்.  நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சரவணன், மேயர் அன்பழகன், ஆணையர் மதுபாலன், நகரப் பொறியாளர் சிவபாதம், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் திருச்சி மண்டல பொது மேலாளர் சதீஷ்குமார், துணை மேலாளர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்னர், அமைச்சர் கே.என். நேரு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: கும்பகோணம் போக்குவரத்து கோட்டம் கலைஞர் தொடங்கியது. அதனால், அதை மாற்றவில்லை. கும்பகோணத்தில் இருந்தாலும் திருச்சியில் இருந்தாலும் மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் வந்து கொண்டுதான் உள்ளது. திமுகவை வீழ்த்த வேண்டும் என பாமக, ஏற்கனவே பாஜகவுடன் கூட்டணி அமைத்தார்கள். ஆனால், திமுகவை வீழ்த்த முடியவில்லை. திமுகவை விமர்சித்தால் தான், தனக்கு அடையாளம் தெரியும் என்பதால் அன்புமணி ராமதாஸ் திமுகவை விமர்சனம் செய்து வருகிறார்.  பாமகவின் ஒரு தரப்பினர் எங்கள் கூட்டணிக்கு வருவார்களா என்பது எனக்கு தெரியாது. ஆனால் எங்கள் கூட்டணி வலுவாக உள்ளது.  இவ்வாறு அமைச்சர் கூறினார்.