மதச்சார்பின்மையின் மகத்தான சின்னம்
மாவீரன் பகத்சிங்கின் அடிச்சுவட்டில் பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்துப் போராடிய தீரர். ஆங்கிலேயரின் யூனியன் ஜாக் கொடியை இறக்கிவிட்டு இந்தியக் கொடியை பறக்கவிட்டவர். லண்டன் தோட் சிங் (லண்டனை நொறுக்கும் சிங்) என்று கூறி சிறைத் தண்டனை பெற்ற சிறுவன் தோழர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித். பஞ்சாப் விவசாயிகளின் உரிமைக்குப் போராடி வெற்றி பெற்றவர். கம்யூனிஸ்ட் இயக்கத்தின் விவசாயிகள் சங்கத்தின் தலைவராகத் திகழ்ந்தவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நவரத்தின தலைவர்களில் ஒருவர். காலிஸ்தான் பிரிவினை வாதத்தை கடுமையாக எதிர்த்தவர். காஷ்மீர் மக்களின் உரிமைக்காக வாதிட்டவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக சிறப்புறச் செயல்பட்டவர். கூட்டணி அரசியலின் - ஆட்சியின் சிற்பி. பாலஸ்தீன மக்களின் உரிமைகளுக்கும் அரசுரிமைக்கும் குரல் கொடுத்தவர். கியூபாவின் ஒருமைப்பாட்டுக் குழுத் தலைவராகச் செயல்பட்டு காஸ்ட்ரோவின் கரத்தை வலுப்படுத்தியவர். இன்றைய இந்திய அரசியலின் தேவையான மதச்சார்பற்ற, ஜனநாயகக் கட்சிகளின் ஒருங்கிணைப்பின் முன்னோடி தோழர் சுர்ஜித். அவரது வாழ்க்கை நமக்கு என்றென்றும் வழிகாட்டும் ஒளிவிளக்காகத் திகழும்.