tamilnadu

img

ஏழைமையிலும் சிறகடித்து பறக்கும் சிறுமி!

ஏழைமையிலும் சிறகடித்து பறக்கும் சிறுமி!

அரியலூர் மண்ணின் பத்து வயதே நிரம்பிய ஷர்வானிகா, கஜகஸ்தானின் குளிர்ந்த அல்மாட்டி நகரில் நடந்த, வளர்ந்து வரும் நட்சத்திரங் களுக்கான உலக சாம்பியன்ஷிப்பில் முதல் சுற்றில் தோல்வியைச் சந்தித்தபோது, அது அவள் பயணத்தின் முடிவு அல்ல, ஆரம்பமாக மாறியது. தோல்வியின் கசப்பை முதலில் சுவைத்த அந்த சிறுமியின் மனதில் பயமோ, ஏமாற்றமோ தோன்றியிருக்கலாம். ஆனால், அவரது உள்ளத்தில் நிறைந்திருந்தது வேறொன்று. தன் நாட்டிற்காக, தன் மாநிலத்திற்காக, தன்னை நம்பி அனுப்பிய அரசிற்காக சாதிக்க வேண்டும் என்ற உறுதி மட்டுமே. ஒரு தோல்விக்கு பிறகு, அடுத்து நடந்தது வரலாற்று சாதணையின் பயணம். தொடர்ந்து 9 போட்டிகளில் வெற்றி என்பது வெறும் திறமை மட்டும் சாத்தியமல்ல. இரும்பு மனம், பொறுமை, விடாமுயற்சி, இவை அனைத்திற்கும் மேலாக தன் இலக்கின் மீதான அசைக்க முடியாத நம்பிக்கையாகும். இவை அனைத்தையும் ஒருங்கிணைத்த அந்த சிறுமியின் ஒவ்வொரு வெற்றியும் மேலும் மேலும் வலிமை சேர்த்தது. 10 வயதுக்குட்பட்ட பெண்கள்  பிரிவில் சாம்பியன் பட்டம் வென்று தங்கப்பதக்கமும் அவள்  கழுத்தில் அணிந்தபோது, இந்தியாவின் முகம் பெருமையில் பிரகாசித்தது. இந்த பயணம், வெறும் விளையாட்டு சாதனை மட்டுமல்ல, ஏழ்மையின் நடுவே பூத்த திறமைக்கும், அரசின் ஆதரவால் கனவுகள் நனவாகும் வழிக்கும் உயிருள்ள சான்றாக அமைந்திருக்கிறது. அன்பு நிறைந்த வரவேற்பு தங்கப்பதக்கத்துடன் தில்லி வழியாக சென்னை விமான நிலையத்தை அடைந்தபோது, ஷர்வானிகாவை எதிர்பார்த்திருந்தது உற்சாகமான வரவேற்பு. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் பூங்கொத்துகளுடன், பாரம்பரியமான பொன்னாடை போர்த்தப்பட்டு வழங்கிய வரவேற்பு, வெறும் சடங்காக இல்லாமல் ஒரு சின்னஞ்சிறு வீராங்கனைக்கான மாநிலத்தின் அன்பின் வெளிப்பாடாக அமைந்தது. தன் வெற்றியின் பெருமிதத்தை எளிமையாக பகிர்ந்து கொண்ட இந்த சிறுமி, முதலமைச்சரும் துணை  முதலமைச்சரும் தொடர்ந்து தன்னை ஊக்கப்படுத்துவ தாகவும் தெரிவித்த வார்த்தைகள், ஒரு விளையாட்டு வீராங் கனைக்கு அரசின் ஆதரவு எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தியது.  துளிர்விட்ட திறமை அரியலூர் மாவட்டம், உடையார்பாளையத்தைச் சேர்ந்த ஷர்வானிகாவின் குடும்பம் ஏழ்மையான பின்னணியைக் கொண்டது. அவரது தந்தை பி.சரவணன், தாய் பி.அன்பு ரோஜா ஒரு நெசவாளர். ஒரு இல்லத்தரசி. முதலில் அவளது மூத்த சகோதரன்தான் செஸ் விளையாடினான். கொரோனா  காலத்தில் அவனுடன் துணைக்காக விளையாட ஆரம்பித்த ஷர்வானிகா, படிப்படியாக இந்த உயரத்தை அடைந்திருக் கிறார். மூன்றரை வயதிலேயே, செஸ் போன்ற அறிவார்ந்த விளையாட்டுக்குள் அறிமுகமானார். அவரது மூத்த சகோதரி ஏ.எஸ். ரத்ஷிகாவும் ஒரு சதுரங்க வீராங்கனை. விளையாட்டின் தனித்துவம் காரணமாகவே ஷர்வானிகா சதுரங்கத்தைத் தேர்ந்தெடுத்தார். பயிற்சியும் விடாமுயற்சியும் ஆரம்பத்தில், ஷர்வானிகா அரியலூரில் சசிகுமாரிடம் பயிற்சி பெற்றார். பிறகு, திருத்தங்கல் ஹட்சன் சதுரங்க அகாடமியில் ஜி.எம். விஷ்ணு பிரசன்னா, கணேஷ் ஆகியோர் வழிகாட்டியுள்ளனர். ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 10 மணிநேரம் பயிற்சி எடுத்திருக்கிறார். அரசின் ஆதரவும் நம்பிக்கையும் விளையாட்டு வீரர்களுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் துணை முதலமைச்சரின் ஆதரவால் ஏழை வீட்டுக் குழந்தைகளும் தங்கள் இலக்கை எளிதாக அடைய முடியும் என்பதற்கு இவரும் ஒரு உதாரணம். ரூ.2 லட்சத்து 37 ஆயிரம் நிதியுதவி வெறும் பணமாக மட்டும் இல்லாமல், ஒரு சின்னஞ்சிறு கனவின் இறக்கைகளாக மாறியிருக்கிறது. சாதனைகளின் பாதை உடையார்பாளையம் பஞ்சாயத்து யூனியன் தொடக்கப் பள்ளியில் (மேற்கு) 2 ஆம் வகுப்பு படிக்கும்போது, 2022 ஆம் ஆண்டு 7 வயதுக்குட்பட்டவர்களுக்கான தேசிய செஸ் சாம்பி யன்ஷிப்பில் ஷர்வானிகா 11/11 வெற்றிகளைப் பெற்று அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதைத் தொடர்ந்து,  மாநில அளவில் 8 மற்றும் 9 வயதுக்குட்பட்டோர்  சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெற்றிபெற்று முத்திரை  பதித்துள்ளார். ஆசிய பள்ளிகளுக்கான சாம்பியன்ஷிப்பிலும் வெற்றி வாகை சூடியதால் இலங்கையில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான ஆசிய போட்டியிலும் பங்கேற்றார். எதிர்காலத்தின் கனவும், செஸ் வல்லரசும் இந்தியா சதுரங்கத்தில் அடுத்த உலகளாவிய வல்லரசாக மாறும் என்று முன்னாள் உலக சாம்பியனான விளாடிமிர் கிராம்னிக் கூறியுள்ளார். உலக சாம்பியன்ஷிப் போட்டியில் கேரி காஸ்பரோவை வீழ்த்திய பெருமையைப் பெற்ற இந்த ரஷ்ய வீரர், இந்தியாவில் கிராண்ட் மாஸ்டர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது மட்டுல்ல, திறமையானவர்கள் வளர்ந்து வருவதையும் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், எளிய பின்னணியைச் சேர்ந்த குழந்தைகள் சதுரங்கத்தில் ஈடுபட்டு அதில் முத்திரை பதிக்கும் திறனைக் கண்டு அவர் நெகிழ்ச்சியடைந்துள்ளார். இந்த பின்னனியில்தான் ஷர்வானிகாவின் இந்த பயணம் தொடர்கிறது. இந்த தங்கம் முதல் படி மட்டுமே. இன்னும் பல சாதனைகளை படைப்பார் என்ற நம்பிக்கை நம் அனைவருக்கும் உண்டு. ஏழை குடும்ப பின்னணியிலிருந்து வரும் திறமைகளுக்கு வழி வகுக்கிறது என்பதற்கு இந்த சிறுமியின் வெற்றி ஒரு நம்பிக்கை சுடராகும். -சி.ஸ்ரீராமுலு